×
Saravana Stores

திருநள்ளாறு கோயிலில் 12ம் தேதி தேரோட்டம்

காரைக்கால், ஜூன் 4: காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரமோற்சவ விழா கடந்த மே 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12ம்  தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்களை அலங்கரிப்பது, தேர் செல்லும் சாலைகளை செப்பனிடுவது உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (5ம் தேதி) அடியார்கள் வீதியுலா, 6ம் தேதி செண்பகத் தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் தேதி பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் வீதியுலா, 11ம் தேதி செண்பகத் தியாகராஜ சுவாமி தேர் நிலையத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 12ம் தேதி காலை தேரோட்டமும், 13ம் தேதி இரவு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும், ஜூன் 14ம் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, 5 தேர்களையும் விரைவாக அலங்கரிக்கவும், தேர்களிலும் பொருத்தப்பட்டுள்ள ஹைட்ராலிக் பிரேக்கை சரிபார்க்கவும், தேர் செல்லும் சாலைகளை செப்பனிடவும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. மேலும், தெப்பத்திருவிழா நடைபெறும் பிரம்மதீர்த்தமும் சீர்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர். ஏற்பாடுகளை கோயில் தனி அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான விக்ராந்த்ராஜா தலைமையில், கோயில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.    

Tags : Thirunallur ,
× RELATED கும்பகோணம் அருகே திருநல்லூரில்...