×

நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு வாகன நிறுத்தங்களை முறைப்படுத்த நடவடிக்கை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

நாகர்கோவில், மே 30:   நாகர்கோவிலில் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துக்களை தடுக்க மாநகராட்சி ஆணையர் மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு போலீசார் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். நாகர்கோவில்  மாநகரில் மிகவும் குறுகிய சாலைகள் உள்ளன. இன்றைய வாகன நெரிசல்களுக்கு  ஏற்றவகையில் சாலைகள் அகலமாக இல்லை. மேலும் இருக்கும் சாலைகளும்  ஆக்ரமிப்புகளில் சிக்கியுள்ளன. இந்த ஆக்ரமிப்புகள் அகற்றப்படவில்லை.  இதுபோன்ற பல காரணங்களால் நாகர்கோவிலில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டு வருகிறது.

இதுபோல முறையான வழிகாட்டி பலகைகள் இல்லாததால்,  தேவையில்லாமல் வெளியூர் பயணிகள் நகருக்குள் வந்து தாங்கள் செல்ல வேண்டிய  சாலை எதுவென தெரியாமல் தடுமாறி வருகின்றனர். குறிப்பாக திருவனந்தபுரத்தில் இருந்து வருபவர்கள் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு சாலையிலும், மணிமேடை சந்திப்பு பகுதியிலும், நெல்லை செல்பவர்கள் கோட்டாறு மற்றும் பொதுப்பணித்துறை சாலை பகுதிகளில் வழி தெரியாமல் வாகனங்களை நிறுத்தி அவ்வழியாக செல்வோரிடம் வழி கேட்பது தினசரி நிகழ்வாகி விட்டது. முன்பு பிரதான சாலைகளில் போக்குவரத்து பிரிவு போலீசார் ரோந்தில் ஈடுபட்டு, வழியில் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் வாகனங்களை நகர்த்தவும், வணிக நோக்கில் நிற்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது வழக்கம். ஆனால் தற்போது, இந்த நடவடிக்கைகள் இல்லை. இதனால் ஒருவழி  பாதையில் அத்துமீறும் கனரக வாகனங்கள், பிரதான சாலைகளில் நடுவழியில்  நிறுத்தப்படும் வாகனங்களாலும் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்  ஏற்படுகிறது.  குறிப்பாக ஒழுகினசேரியில் இருந்து அவ்வை சண்முகம் சாலையிலும், பாலமோர் சாலையிலும் பொதுப்பணித்துறை சாலையிலும் ஒருவழிப்பாதையில் கார்கள் அத்துமீறி வருகின்றன. மீனாட்சிபுரம், மணிமேடை சுற்றியுள்ள 4 சாலைகள்,  கோட்டாறு பகுதிகளில் தற்போது சர்வ சாதாரணமாக வணிக நிறுவனங்களின் கனரக வாகனங்களும், கடை உரிமையாளர்களின் வாகனங்கள், கடைக்கு வரும் மக்களின் கார்களும் நிற்கின்றன. இதனால் கடும் ேபாக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும் திடீரென வாகனங்களை நிறுத்துவதால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணா பேருந்து நிலையம் அருகே நடந்த  விபத்தில் தாயும், மகளும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் கடும்  அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நாகர்கோவில் மாநகர  பகுதியில் விபத்துக்களை கட்டுப்படுத்தல் மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு  தீர்வு காணும் வகையில் வாகன நிறுத்தங்களை முறைப்படுத்திட, போக்குவரத்து  ஒழுங்குபடுத்தும் பிரிவு போலீசாருடன் இணைந்து நாகர்கோவில் மாநகராட்சி  ஆணையர் சரவணகுமார் நேற்று  மாநகரம் முழுவதும் ஆய்வு நடத்தினார்.  இதைத்தொடர்ந்து  விபத்துக்களை தவிர்க்கும் வகையில் வாகன நிறுத்தங்களை முறைப்படுத்தவும், சாலைகளை விரிவாக்கம் செய்யவும் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

Tags : commissioner ,Nagercoil ,
× RELATED வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து...