×

ராதாபுரம், நாங்குநேரி தொகுதிக்கு தாமிரபரணி குடிநீர்

நெல்லை, மே 30: ராதாபுரம், நாங்குநேரி தொகுதிக்கு தாமிரபரணி குடிநீர் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கலெக்டரிடம் ஞானதிரவியம் எம்பி வலியுறுத்தியுள்ளார். நெல்லை தொகுதியில் வெற்றி பெற்ற ஞானதிரவியம் எம்பி நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அப்போது எஸ்பி அருண் சக்திகுமார், டிஆர்ஓ  முத்துராமலிங்கம் உடனிருந்தனர். அப்போது ஞானதிரவியம் எம்பி கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ராதாபுரம், நாங்குநேரி தொகுதி மக்களுக்கு கருணாநிதி ஆட்சி காலத்தில் நாங்குநேரி - திசையன்விளை, களக்காடு - வள்ளியூர் - ராதாபுரம் வரை தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் இரண்டு தொகுதி மக்களுக்கும் குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்காக அந்த பகுதியில் ஆழ்குழாய் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது கோடை காலம் என்பதால் ஆழ்குழாய் கிணற்றிலும் தண்ணீர் வற்றி விட்டது. அதனால் கூடுதலாக ஆழ்குழாய் கிணறுகளை புதிதாக அமைப்பதுடன், அம்பாசமுத்திரம், நெல்லை, பாளையங்கோட்ைட, ஆலங்குளம் தொகுதிக்கும் கூடுதல் குடிநீர் கிடைக்க தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை சரியாக  பராமரித்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வள்ளியூர் முதல் திருச்செந்தூர் வரை செல்லும் பிரதான சாலையில் வள்ளியூரில் ரயில்வே இருப்புப் பாதை செல்கிறது. இந்த இருப்புப்பாதை அருகே ரயில்வே சுரங்கப்பாதை பணி கடந்த ஓராண்டு காலமாக நடந்து வருகிறது. வள்ளியூரில் இருந்து தினசரி கள்ளிக்குளம், ராதாபுரம், திருச்செந்தூர் வரை படிப்பதற்காக மாணவ, மாணவிகளும் தொழில் நிமித்தமாக பொதுமக்களும் சென்று வருகின்றனர். சுரங்கப்பாதை பணி மந்தமாக நடப்பதால் 10 கி.மீ., தூரம் மாற்றுப் பாதையில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. அதன் அருகில் உள்ள புதிய தார் சாலையும் சரிவர அமைக்கப்படாததால் விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. எனவே ரயில்வே இருப்புப்பாதை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
எம்பியுடன் வக்கீல் அணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் ஜோசப் ஆரோக்கியராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Tags : Thamiraparani ,block ,Nanguneri ,
× RELATED கடலூரில் நடத்துநர் தாக்கப்பட்டத்தை...