×

ஏர்வாடி அருகே உப்பு ஓடை பாலம் இணைப்பு பகுதியில் தொடரும் விபத்துகள்

ஏர்வாடி, மே 29: ஏர்வாடி அருகே ஆலங்குளம் உப்பு ஓடை பாலம் இணைப்பு பகுதி உயரமாக உள்ளதால் விபத்துகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இதைத் தடுக்க அங்கு எச்சரிக்கை பலகை வைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர்.
 நெல்லை மாவட்டம், ஏர்வாடியில் இருந்து நான்குநேரி செல்லும் சாலையில் ஏர்வாடி அருகே  ஆலங்குளம் பகுதியில் உப்பு ஓடை பாலம் ஒன்று கட்டப்பட்டது. இருப்பினும் இப்பாலத்தின் வடக்கு மற்றும் தெற்கு ரோட்டின் இணைப்பு பகுதி உயரமாக உள்ளதால் இவ்வழியாக வாகனங்கள் அதிவேகமாக வந்துசெல்லும் போது விபத்தில் சிக்கும் அபாயம் தொடர்கிறது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் தவறிவிழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்கின்றனர். ஏர்வாடி- நான்குநேரி சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் புதிதாக அதிவேகமாக வரும் வாகனங்கள் பாலத்தின் இணைப்பு பகுதி உயரமாக இருப்பதை கவனிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிவிடுகின்றனர். கடந்த மாதம் நெல்லையில் இருந்து புறப்பட்ட கார் இந்த பாலத்தில் வந்தபோது தறிகெட்டு ஓடியதோடு அருகேயுள்ள மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் சரிந்து விழுந்தது. இருப்பினும் அப்போது யாரும் அங்கு இல்லாததால் பெரிய அளவில் உயிர்சேதம் எதுவும் நடைபெறவில்லை.

இச்சம்பவத்தில் சேதமடைந்த மின்கம்பத்திற்கான தொகையை ஏர்வாடி மின்சார வாரியத்தில் கட்டிச்சென்றதாகக் கூறப்படுகிறது. இதே போல் இவ்வழியாக பஸ்சில் பயணிக்கும் போது பின்சீட்டில் அமர்ந்து செல்லும் முதியவர்கள் உள்ளிட்ட பயணிகள், இந்த பாலத்தை கடக்கும்போது  தூக்கிப் போடப்படுவதால் முதுகுவலி உள்ளிட்ட பல்வேறு அவஸ்தைகளுக்கு உள்ளாகின்றனர்.  எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி பாலத்தின் வடக்கு மற்றும் தெற்கு இணைப்பை  மேடு பள்ளம் இல்லாமல் சரிசெய்து சாலையை முறையாக சீரமைப்பதோடு சீரமைக்கும் வரை விபத்து பகுதி என எச்சரிக்கை பலகைகள் வைக்க முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள் உள்ளனர்.



Tags : Accidents ,salt bridge link area ,Airwadi ,
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...