×

சேலத்தில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை ஒரு சுற்றுக்கு 14 இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்

சேலம், மே 21:  சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கருப்பூர் அரசு பொறியியல்  கல்லூரில் நாளை மறுதினம் (23ம்தேதி) நடக்கிறது. இதில், ஒரு சுற்றுக்கு 14 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்தார். தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. இதில் சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் வடக்கு, மேற்கு, தெற்கு, வீரபாண்டி, ஓமலூர், இடைப்பாடி ஆகிய 6 தொகுதிக்களுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை மறுநாள் (23ம்தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்கு எண்ணிக்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அதிகாரிகள், வேட்பாளர்களின் முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ரோகிணி தலைமை வகித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாநகராட்சி கமிஷனர் சதீஸ், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை மற்றும் அதிமுக, திமுக, காங்கிரஸ், அமமுக, மநீம, சுயேட்சை வேட்பாளர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை, எடுத்து வர வேண்டிய மற்றும் எடுத்து வரக்கூடாத பொருட்கள் குறித்து கலெக்டர் ரோகிணி விரிவாக பேசினார்.

கூட்டத்திற்கு பிறகு கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது: ேசலம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. ஒவ்வொரு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் உதவி தேர்தல் அதிகாரிகள் தலைமையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 14 மேஜைகள் அமைக்கப்பட்டு ஒரு சுற்றுக்கு 14 வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று முடிவடைந்த பின்னரும், முடிவுகள் குறித்து உதவி தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவிப்பார். பின்பு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முடிவுகளை அறிவிப்பார். வாக்கு எண்ணிக்கையின் போது செல்போன், லேப்டாப், எலக்டிரானிக் பொருட்கள், பேனா, ஆயுதம் போன்ற பொருட்கள் எடுத்து வரக்கூடாது. முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அந்த அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. முதலாவதாக மத்திய பாதுகாப்பு போலீசாரும், அடுத்து தமிழ்நாடு சிறப்பு போலீசாரும், மூன்றாவதாக உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.  ஒவ்வொரு சுற்றின் முடிவும் போர்டில் எழுதப்படும். வாக்குப்பதிவு இயந்திரம் ஸ்ட்ராங் ரூமில் இருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரும்வரை கேமிராவில் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது. ஒரு தொகுதிக்கு 5 விவிபேட் மெஷின் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒப்புகைச்சீட்டு எண்ணப்படும். அனைத்து சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்தபிறகு, இறுதி முடிவு அறிவிக்கப்படும். வாக்கு எண்ணும் பணியில் தேர்தல் அதிகாரிகள், போலீசார் உள்பட 1500 பேர் ஈடுபடுகின்றனர். இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.

Tags : round ,
× RELATED சில மாநிலங்களில் பாஜக...