திருத்தணி: திருத்தணி வழியாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பணி துவங்கப்பட்டது. இதற்காக 200 அடி அகலத்தில் சாலையை அமைக்க திட்டமிடப்பட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியது. இதன்படி திருத்தணி வட்டத்துக்கு உட்பட்ட காஞ்சிப்பாடி, கூளூர், கனகம்மாசத்திரம், பனப்பாக்கம், ஆற்காடுகுப்பம், நாபளூர், லட்சுமிபுரம், சத்திரஞ்ஜெயபுரம், பட்டாபிராமபுரம், தரணிவராகபுரம், முருக்கம்பட்டு மற்றும் பொன்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக சாலையின் அகலத்துக்கு ஏற்ப இருபுறத்திலும் அளவீடு செய்து நிலங்களை வருவாய் துறையினர் கையகப்படுத்தினர். சாலை அமைக்க ஒரு சர்வே நம்பரில் தேவையான நிலங்களை எடுத்துக்கொண்டு அதற்கான இழப்பீட்டு தொகையை பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை வழங்கியதாகவும், மீதமுள்ள நிலங்களை பட்டா மாற்றம் செய்து தரவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து டாக்டர் கெங்குசாமி நாயுடு மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், ‘‘பட்டாபிராமபுரம் கிராமத்தில் எங்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கெங்குசாமி நாயுடு ராஜலட்சுமி அம்மாள் கலைக்கல்லூரி கட்டப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையையொட்டி, 30 சென்ட் நிலம் இருந்தது. இதில் 12 சென்ட் நிலத்தை சாலை அமைக்க உட்பிரிவு செய்து எடுத்துக்கொண்டு இழப்பீடு தொகையையும் கொடுத்துவிட்டனர். மீதம் உள்ள 18 சென்ட் நிலத்தை எங்களுக்கு பட்டா மாற்றி தர வேண்டும். இதுகுறித்து வட்டாட்சியரிடம் மனு கொடுத்தோம்.
ஆனால் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், தேசிய நெடுஞ்சாலை துறையினர் பட்டா மாற்றம் செய்யக் கூடாது என தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் எங்கள் நிலத்தை பட்டா மாற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் கல்லூரி பணி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதே நிலைதான் 12 கிராம விவசாயிகளுக்கும் உள்ளது.எனவே தேசிய நெடுஞ்சாலை துறை உடனடியாக எங்களுக்கு உரிமையான நிலங்களை பட்டா மாற்றிக் கொள்ள, தேசிய நெடுஞ்சாலையும், மாவட்ட கலெக்டரும் தடையை நீக்க வேண்டும்’’ என்றனர்.