×

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா கோலாகலம் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அம்மன் சிரசு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

குடியாத்தம், மே 16: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் நேற்று காலை அம்மன் சிரசு பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து கோயிலை வந்தடைந்தது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பிரசித்திபெற்ற விழாக்களில் ஒன்று குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா. ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1ம் தேதி இந்த விழா நடைபெறுகிறது. அதன்படி இந்தாண்டு சிரசு திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.
இத்திருவிழா கடந்த மாதம் 10ம் தேதி பால் கம்பம் நடப்பட்டு, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. இவ்விழாவின் ஒரு நிகழ்வாக கடந்த 11ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு தினமும் திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்தும், கூழ் வார்த்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் நேற்று நடந்தது. காலை 6 மணியளவில் முத்தியாலம்மன் கோயிலில் இருந்து கெங்கையம்மன் சிரசு ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தியபடியே கோயிலை வந்தடைந்தது. அங்கு மண்டபத்தில் சண்டாளச்சியின் உடலில் அம்மன் சிரசு பொருத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு கண் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மலர் மாலை, எலுமிச்சை மாலை, ரூபாய் நோட்டு மாலை ஆகியவற்றை பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனுக்கு அணிவித்து வழிபட்டனர். சிரசு ஊர்வலத்தின் போது வழிநெடுகிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தேங்காய் உடைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். சிரசுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிவித்து தேங்காய் உடைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் 3 டன் தேங்காய்கள் சிரசு ஊர்வலத்தின்போது உடைக்கப்பட்டன. மேலும் சிரசு ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் மயிலாட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம் என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியபடி வந்தனர்.

திருவிழாவின் இறுதி நிகழ்வாக இன்று இரவு அம்மன் உடலில் இருந்து சிரசு பிரிக்கப்பட்டு, கவுண்டன்ய ஆற்றங்கரையில் அலங்காரம் கலைக்கப்பட்டு மீண்டும் முத்தாலம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த ஆண்டு குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் விழாவையொட்டி நேற்று வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு ஏடிஎஸ்பி ஆசைத்தம்பி தலைமையில் 3 டிஎஸ்பிகள், 10 இன்ஸ்பெக்டர்கள், 30 எஸ்ஐக்கள் உட்பட 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர தனிப்பிரிவு போலீசார், உளவுத்துறை, வெடிகுண்டு நிபுணர்க்ள பல்வேறு பாதுகாப்பு கருவிகளுடன் கோயில், ஊர்வலம், சிரசு மண்டபம் உட்பட முக்கிய இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.


கிராமங்கள் சார்பில் மரியாதை

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவின் போது குடியாத்தம் நகரை சுற்றியுள்ள 30 முதல் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் சார்பில் தாரை தப்பட்டை, பம்பை மேளம் முழங்க, சிலம்பாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம் என ஆட்டம் பாட்டமுடன் வந்து அம்மனுக்கு மாலைகள் செலுத்தப்பட்டது. இது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் கெங்கையம்மன் குடியாத்தம் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களை காக்கும் தெய்வமாகவும் விளங்குகிறாள் என்றும் பக்தர்கள் தெரிவித்தனர்.

பெண்களின் கூந்தலை துண்டித்த கும்பல்

பொதுவாக திருவிழாக்காலங்களில் கூடும் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு ஆசாமிகள் பணம், நகை போன்றவற்றைதான் அபேஸ் செய்வர். ஆனால், குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் நகை, பணம் மட்டுமின்றி 10க்கும் மேற்பட்ட பெண்களின் கூந்தலையும் மர்ம ஆசாமிகள் வெட்டி எடுத்து சென்றுள்ளனர். கூட்டத்தை விட்டு வெளியில் வந்த பிறகே தங்கள் கூந்தல் பறிபோனதை அறிந்த பெண்கள் அதிர்ச்சியடைந்து அங்கிருந்த போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை கண்டு போலீசார் மிரண்டு போனதுதான் மிச்சம்.

திருவிழாவில் அன்னதானம்

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவில் நகரின் பல இடங்களில் வீடுகள், மண்டபங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதோடு சாலைகள், தெருக்களில் ஆங்காங்கே நீர்மோர், எலுமிச்சை சாறு, கூழ், குடிநீர், குளுக்கோஸ் கலந்த நீர் ஆகியன வழங்கப்பட்டன.

தற்காலிக பஸ் நிலையங்கள்

கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு வேலூர், காட்பாடி மார்க்கங்களில் இருந்து வரும் பஸ்களுக்கான நகராட்சி பள்ளி மைதானமும், ஆம்பூர் மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்களுக்காக செருவங்கியிலும், பேரணாம்பட்டு மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் நிறுத்த பெரும்பாடியிலும் என 3 தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இத்திருவிழாவுக்காக வேலூர், ஆம்பூர், பேரணாம்பட்டு, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஒடுகத்தூர் என பல்வேறு இடங்களில் இருந்து 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கோயில் அருகில் 2 தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ் ஒன்றும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 25 பேர் கொண்ட தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மின்கசிவு, மின்தடை உட்பட மின்சாரம் தொடர்பான எதிர்பாராத பிரச்னைகளை சமாளிக்க 25க்கும் மேற்பட்ட மின்ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

மதியத்துக்கு மேல் கொட்டிய மழை

பொதுவாக குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவுக்கு முன்னும், பின்னும் மழை பெய்வது வாடிக்கை. இந்த ஆண்டும் திருவிழாவுக்கு ஒரு நாள் முன்னதாக பலத்த மழை குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கொட்டியது. நேற்று மதியமும்1 மணி நேரத்துக்கும் மேல் பலத்த மழை பெய்தது.

Tags : Devotees ,Krishna ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்