×

சிவகிரி திரவுபதியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா துவக்கம்

சிவகிரி, மே 14:  சிவகிரி திரவுபதியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. சிவகிரியில் பிரசித்திபெற்ற திரவுபதியம்மன் கோயிலில் வைகாசி மாதம் பூக்குழித் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதையொட்டி அதிகாலை மூலவர் திரவுபதியம்மன், உற்சவ மூர்த்திகள்  பாஞ்சாலி, கிருஷ்ணர், அர்ச்சுணர் மற்றும் பரிவார தெய்வங்கள்  பஞ்சபாண்டவர்கள் தர்மர், பீமன், நகுலன், அர்ச்சுணர், சகாதேவர்  ஆகியோர்களுக்கு 18 வகையான நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேக பூஜைக்கு பிறகு கொடியேற்றப்பட்டது.
 
நிகழ்ச்சியில் கோயில்  செயல் அலுவலர், தக்கார், ஆலய அர்ச்சகர், மண்டகப்படிதாரர்கள்,  காப்புக்கட்டும் சங்கத்தினர், பக்தர்கள் என திரளானோர் பங்கேற்றனர். திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு மண்டகப்படிதாரர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரவில்  அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சப்பரத்தில் அம்மன், மகாபாரதத்தில்  துச்சாதனனை பாஞ்சாலி பலிவாங்கும் கதைக்களத்திற்கேற்ப காட்சியளித்து  வீற்றிருக்கும் வீதியுலா நடக்கிறது. விழாவின் சிகரமான பூக்குழி இறங்கும் வைபவம் வரும் 21ம் தேதி மாலை நடக்கிறது.

Tags : Sivagiri Tiruapapadyamman ,festival ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...