×

தொகுதி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன் அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் உறுதி

க.பரமத்தி, மே 10:  தொகுதி வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன் என அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் பேசினார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக செந்தில்நாதன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட குக்கிராமங்கள் தோறும் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று தொகுதிக்குட்பட்ட க.பரமத்தி ஒன்றியம் ராஜபுரம், தொக்குப்பட்டி, சின்னதாராபுரம், நடந்தை ஆகிய நான்கு ஊராட்சிகளுக்குட்பட்ட குக்கிராமங்கள் முழுவதும் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். சென்ற இடங்களில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். ஒன்றிய செயலாளர் பொன்சரவணன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

அப்போது பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் பேசுகையில், கடந்த 2011ம் ஆண்டு எனக்கு வயது 28ல் சட்ட மன்றதேர்தலில் வாக்கு கேட்டு வந்தேன் பிறகு தோல்வியுற்ற நிலையிலும் வாக்காளர்களாகிய உங்கள் அனைவரையும் சந்தித்து நன்றி தெரிவித்து சென்றேன். தற்போது எனக்கு வயது 36ல் மீண்டும் சட்ட மன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். அரவக்குறிச்சி, க.பரமத்தி ஒன்றிய பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.220 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வர உள்ளது.

முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பொது மக்களுக்காக நல்ல பல அரிய திட்டங்கள் கொண்டு வருவார். அவற்றை பொதுமக்களாகிய உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன் என்பதை உறுதியளிக்கிறேன். எனவே அம்மாவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் என பேசினார். வேட்பாளருடன் அதிமுக மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Senthilnathan ,AIADMK ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி