×

திண்டுக்கல் ரவுண்ட்ரோட்டில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு

திண்டுக்கல், மே 10: திண்டுக்கல் ரவுண்ட்ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2009 துவங்கப்பட்டது. இது துவங்கி 10 ஆண்டுகளாகியும் இன்னும் முடிந்தபாடில்லை. அதிகபட்சமாக திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் இதுவரை 54 முறை பாதாள சாக்கடைக்காக தோண்டியுள்ளனர். அடுத்ததாக ஜிடிஎன் சாலையை 41 முறை மாநகராட்சி தோண்டியுள்ளது. நேருஜிநகர், ஆர்எம் காலனி, பழநி ரோடு உட்பட பல இடங்களில் ஆண்டுகணக்கில் தோண்டுகின்றனர். தற்போது பாதாள சாக்கடை திட்டத்தில் அனைத்து சாக்கடைகளும் இணைப்பு கொடுத்து விட்டனர். இந்த இணைப்புகள் சரியாக பொருத்ததாலும் ஏர்வால்வில் அடிக்கடி வெடிப்பு, மூடிகளில் அடைப்பு, சில நேரங்களில் குழாய்கள் உடைப்பு போன்றவையால் ரோடுகள், தெருக்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் பல்கி பெருகி ஓடுகிறது. திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் பஞ்சம்தான் அடிக்கடி ஏற்படுகிறதே தவிர, பாதாளசாக்கடை கழிவுநீர் ஆறாக ஓடுவதில் பஞ்சம் இல்லாத நிலை நீடிக்கிறது.

திண்டுக்கல் ரவுண்ட்ரோடு, நகரின் மைப்பகுதியில் இதயமாக விளங்குகிறது. இங்குள்ள ராம்நகர், ரோஜாநகரில் நேற்று காலையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு, வீடுகளுக்குள் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. வீடுகளில் வசிப்பவர்கள் செய்தவறியாது திகைத்து மாநகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. பின்பு பொதுமக்கள் கூடி மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து பகல் 12 மணிக்கு அலுவலர்கள் வந்து சரி செய்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, ‘செய்ய முடியாத வேலையை மாநகராட்சி நிர்வாகம் செய்வதாக கூறி பொதுமக்கள் துயரத்தில் ஆழ்த்துகிறது. 10 ஆண்டுகளாக பாதாதள சாக்கடை பணிகள் நடந்தும் இன்னும் முடிந்தபாடில்லை. கடந்த வாரம் திண்டுக்கல் 29வார்டில் உள்ள பாதாள காளியம்மன் கோயில் முன்பு அடைப்பு ஏற்பட்டு, வீடுகளுக்குள் கழிவு நீர் ஓடியது. இதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டியதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதியிலும் இன்று நடந்து விட்டது.

பொதுமக்கள் வசிக்க முடியாத அளவிற்கு அனைத்து தெருக்களில் உள்ள கழிவுநீரும் வீடுகளுக்குள் வருகிறது. மாநகராட்சி நிர்வாகத்திற்கு போன் செய்தால் உடனே வருவதில்லை. அவர் விடுமுறையில் சென்றுள்ளார். இவர் சென்றுள்ளார். விரைவில் வருகிறோம் என 4 மணிநேரம் கழித்து வருகின்றனர். இதற்கு பெயர்தான் விரைவு என அவர்கள் அர்த்தம் கொள்கின்றனர். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், மாநகராட்சியில் பாதாள சாக்கடைப்பணிகள் பெயரளவில் மட்டுமே நடக்கிறது. ஆனால் வரி மட்டும் விடாமல் வசூலிக்கின்றனர். அதில் எந்த தொய்வும் காட்டுவதில்லை. பொதுமக்களுக்கு பிரச்னை என்றால் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். பாதாளா சாக்கடை திட்ட குழாய்கள் அதிகாரிகள் ஒழுங்குபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் இதுமாதிரி உடைப்பு ஏற்பட்டு அடிக்கடி ரோடுகள், தெருக்களில் கழிவுநீர் ஓடுவதை தடுக்க முடியாது. பொதுமக்களும் தொற்று நோய்களால் பாதிக்கப்படுவார்கள். பணியாற்றாத மாநகராட்சி அலுவலர்கள் மீது கலெக்டர் வினய் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Dindigul Roundtro ,
× RELATED வேளாண் மாணவர்கள் கிராமப்புற மதிப்பீடு