×

விருத்தாசலம் அருகே சூறாவளி காற்று வீசியதில் வாழை மரங்கள் சேதம்

விருத்தாசலம், மே 9: விருத்தாசலம் அருகே உள்ள சின்னவடவாடி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் விவசாயிகள் வாழை பயிர் செய்து வருகின்றனர். தற்போது வாழை மரங்கள் அனைத்தும் நன்கு விளைந்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று விருத்தாசலம், மங்கலம்பேட்டை, பெண்ணாடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. சுமார் இரண்டு மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழை, காற்று காரணமாக சின்னவடவாடி பகுதியை சேர்ந்த மகேஷ்குமார், அழகேசன், அண்ணாமலை உள்ளிட்ட பல விவசாயிகளின் சுமார் 20க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அனைத்தும் முறிந்து விழுந்து சேதமடைந்தது. இதில் வாழை இலை, வாழை பூ, வாழை தார் உட்பட அனைத்தும் சேதமடைந்ததால் பல லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, தற்போது விவசாய விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காததால் அதிக அளவில் வாழை பயிர் பயிரிட்டு வருகிறோம். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் குடும்பம் நடத்தி வருகிறோம். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழை, காற்றில் மரங்கள் அனைத்தும் முறிந்து  விழுந்து பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது. அதனால் வருவாய் துறை, வேளாண் துறை  உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு, நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags : hurricanes ,Vriddhachalam ,
× RELATED விருத்தாசலம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயம்