தாரமங்கலம் அருகே வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல்

ஓமலூர், மே 9: தாரமங்கலம் அருகே புதுச்சேரி மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 138 வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்துள்ள தாரமங்கலம் அருகே சோழவந்தியான்வளவு பகுதியில்  வெளிமாநில மதுபானங்களை சட்டவிரோதமாக கடத்தி வந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.

 

இதுகுறித்து அப்பகுதி மக்கள், தாரமங்கலம் போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் போலீசார் கண்டு கொள்ளாத நிலையில், சிறப்பு பறக்கும் படை அதிகாரியும், சப் கலெக்டருமான  சிவசுப்பிரமணியனிடம் பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரையடுத்து சப் கலெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் தாரமங்கலம் பகுதியில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தாரமங்கலம் அருகேயுள்ள சின்னப்பம்பட்டி சோழவந்தியான்வளவு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடைக்கு அருகே, அதிகாலை நேரத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, மது விற்பனை செய்யும் கும்பலை பறக்கும்படை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். ஆனால், அதிகாரிகள் வருவதை அறிந்த மது விற்பனை கும்பல், மது பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடினர். இதையடுத்து, 138 புதுச்சேரி மாநில மது பாட்டில்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாரமங்கலம் போலீசில், சப் கலெக்டர் சிவசுப்பிரமணியன் புகார் அளித்தார். புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார், சட்டவிரோதமாக வெளிமாநில மது விற்பனை குறித்து வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: