×

அட்சய திரிதியை நாளில் தங்க நகைகள் வாங்க குவிந்த பெண்கள் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீஸ் ரோந்து

நாகர்கோவில், மே 8: குமரியில் அட்சய திரிதியையொட்டி தங்க நகைகள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திரிதியை அட்சய திரிதியை என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் நாம் வாழ்வுக்கு தேவையான பொருட்களை வாங்கினால் அது வாழ்நாள் முழுவதும் பெருகும் என்பது நம்பிக்கை ஆகும்.  கடந்த சில வருடங்களாக அட்சய திரிதியை நாளில் பொதுமக்கள் தங்கம் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் நேற்று (7ம்தேதி) அட்சய திரிதியையொட்டி நகைகள் வாங்க ஏராளமானவர்கள் குவிந்தனர். தங்கம் கிராம் ஒன்றுக்கு 3000 ஆக இருந்தது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.43 ஆக இருந்தது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகை கடைகளில் காலையிலேயே வாடிக்கையாளர்கள் குவிந்தனர். மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள  நகை கடைகளில் நேரம் செல்ல, செல்ல வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்தது. கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள பிரபல நகை கடைகளிலும் காலை முதலே வாடிக்கையாளர்கள் வர தொடங்கினர். வாடிக்கையாளர்களை வரவேற்கும் வகையில் பல்வேறு வரவேற்பு ஏற்பாடுகளை நகை கடைகள் செய்து இருந்தன.

குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பரிசாக அளித்தனர். பிரபல நகை கடைகளில் அட்சய திரிதியை நாளில் பொதுமக்கள் தங்கம் வாங்க வசதியாக முன் பதிவுகள் செய்யப்பட்டு இருந்தன. ஏராளமான வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் நகை கடைகளில் முன் பதிவு செய்து இருந்தனர். இவ்வாறு முன் பதிவு செய்தவர்களுக்கு சிறப்பு சலுகைகளில் தங்க நகைகள் வழங்கப்பட்டன. இரவு வரை நகை கடைகளில் கூட்டம் இருந்தது.  கூட்டம் அலைமோதியதால் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் நகை கடைகள் அமைந்து உள்ள பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  நாகர்கோவிலில் மீனாட்சிபுரம், அண்ணா பஸ் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அட்சய திரிதியையொட்டி கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.  ஒரு சிலர் அன்னதானம் உள்ளிட்ட உதவிகளை செய்து அட்சய திரிதியை நாளில் வழிபட்டனர்.

Tags : police patrol police ,incidents ,women ,trident ,jewelery ,
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி