×

மின் இணைப்பு தாமதத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

கிருஷ்ணகிரி, மே 7: விவசாயத்திற்கான மின் இணைப்பு வழங்குவதற்கு செய்யப்படும் தாமதத்தை கண்டித்து, சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
கிருஷ்ணகிரியில் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். வட தமிழக பிரசார குழு தலைவர் விஜய்காந்த், மாவட்ட தலைவர் சின்னராஜ், ஒன்றிய செயலாளர் விஜய்குமார், ஒன்றிய தலைவர் தன்ராஜ் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார். மாநில தலைவர் அய்யாக்கண்ணு பங்கேற்று பேசினார். கூட்டத்தில், விவசாயத்திற்காக மின் இணைப்பு கேட்டு 19 ஆண்டுகளாக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதனை கண்டித்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கரும்பு விவசாயிகளுக்கு 14 லட்சம் டன் கரும்புக்கு வழங்க வேண்டிய ₹840 கோடி நிலுவைத்தொகையை கடந்த 26 மாதங்களாக தராமல் இழுத்தடிப்பதை கண்டித்து சர்க்கரை இயக்குநர் அலுவலகம் முன் உடம்பில் துணி இல்லாமல் போராட்டம் நடத்துவது. பட்டா நிலங்களில் உள்ள மின் கோபுரங்கள் ஒன்றுக்கு மாதம் ₹5 ஆயிரம் என விவசாயிகளுக்கு வாடகை கொடுக்க வேண்டும். இயங்காத சர்க்கரை ஆலைகளை அரசு கையகப்படுத்தி அவற்றை அரசு ஏற்று நடத்துவதுடன் விவசாயிகளுக்கும் தர வேண்டிய கரும்புக்கான நிலுவைத்தொகையை கொடுப்பதுடன், சர்க்கரை ஆலையில் வேலை செய்த ஊழியர்களை அரசு ஊழியர்களாக எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், கிருஷ்ணகிரியில் கடந்த 57 ஆண்டுகளாக கேஆர்பி அணை தூர்வாரப்படாமலும், மதகுகள் மாற்றப்படாமலும் உள்ளது. இதனால், 52 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 40 அடியாக குறைந்து விட்டது. மழைக்கால வெள்ள நீரை தர்மபுரி, கிருஷ்ணகிரியில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டமான எண்ணேகொள்புதூர் அணை திட்டத்திற்கு, ₹276 கோடி ஒதுக்கீடு செய்த திட்டம் தமிழக அரசின் அறிவிப்போடு உள்ளது. எனவே, இந்த திட்டத்தை போர்க்கால அடிப்படையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : protest ,Chennai ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...