×

தர்மபுரி அருகே தோக்கம்பட்டியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

தர்மபுரி, மே 7: தர்மபுரி அருகே தோக்கம்பட்டியில் தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சிமெண்ட் கலவை லாரியை சிறை பிடித்து மக்கள் போராட்டம் நடத்தினர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்டது தோக்கம்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான நிலத்தில், தனியார் செல்போன் டவர் அமைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து இப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில், செல்போன் டவர் அமைக்க கூடாது என அதியமான்கோட்டை காவல் நிலையம், கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். இந்நிலையில் நேற்று தனியார் செல்போன் அமைப்பதற்கான, அடித்தளம் அமைக்கும் பணி நடந்தது. இதற்காக சிமெண்ட் கலவை லாரி நேற்று மாலை 5 மணியளவில் தோக்கம்பட்டி கிராமத்திற்கு சென்றது.

இதையறிந்த தோக்கம்பட்டி கிராம மக்கள், சிமெண்ட் கலவை லாரியை சிறைபிடித்தனர். மேலும் தோக்கம்பட்டியில் இருந்து வெண்ணாம்பட்டி செல்லும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து ேபசும் படி போலீசார் அறிவுறுத்திய பின்னர், பொதுமக்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து தோக்கம்பட்டி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் 55 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இதனால் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க அமைக்க கூடாது என விதிகள் உள்ளன.

எங்களது கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி, கலெக்டர் அலுவலகத்தில் எங்களது கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர். இந்த பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எங்களது எதிர்ப்பை மீறி இங்கு செல்போன் டவர் அமைத்தால் எங்களின் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க தயாராக உள்ளோம் என்றனர்.

Tags : protest ,Thokambatti ,cellphone tower ,Dharmapuri ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...