×

சுசீந்திரம் அருகே நடந்த மீனவர் கொலை வழக்கில் வேகமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்

நாகர்கோவில், ஏப்.30 : சுசீந்திரம் அருகே நடந்த மீனவர் கொலை வழக்கில் வேகமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கொலையாளிகளுக்கு விரைவில் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கொலை ெசய்யப்பட்டவரின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மேலமணக்குடியில் நடந்த மீனவர் வின்சென்ட் கொலையில்,  மேல மணக்குடியை சேர்ந்த லாடஸ் (47), அவரது மூத்த சகோதரர் அந்தோணி (49), லாடஸ் மகன்கள் நிதில், அகில் மற்றும் ஜஸ்டின், அஸ்வின் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கீழமணக்குடியை சேர்ந்த கிதியோன் மற்றும் மேலமணக்குடியை சேர்ந்த பாண்டியன் ஆகியோரை தேடி வந்தனர்.  இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளம் பகுதியை சேர்ந்த சகாயராஜ் (46) என்பவரை அரிவாளால் வெட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஏற்கனவே வின்சென்ட் கொலை வழக்கில் போலீசார் தேடி வந்த கிதியோன் (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து கிதியோனை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பாண்டியன் என்பவரும் கைது செய்யப்பட்டார். வின்சென்ட் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த 8 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர். கடைசியாக கைதான கிதியோன், பாண்டியன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில் கிதியோன் கூறுகையில், சம்பவத்தன்று இரவு நான் மேலமணக்குடியில் உள்ள உறவினர்களை பார்த்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தேன். மேலமணக்குடி அருகே வின்சென்ட் மற்றும் அவரது மனைவி தஸ்நேவிஸ், உறவினர்கள் படுத்திருந்தனர். நான் கையில் டார்ச் லைட் வைத்து இருந்தேன். இருட்டாக இருந்ததால், யார் படுத்துள்ளனர் என்று பார்ப்பதற்காக டார்ச் லைட் அடித்தேன். அப்போது வின்சென்ட் என்னை திட்டினார். நான் பதிலுக்கு திட்டினேன். அப்போது வின்சென்ட் மற்றும் அவருடன் இருந்தவர்கள் என்னை தாக்க வந்தனர். இந்த சத்தம் கேட்டு எனது உறவினர்களும் வந்தனர். வின்சென்ட் எங்களை மிக அவதூறாக திட்டினார். இந்த தகராறில் தான் வின்சென்ட்டை வெட்டினோம் என கூறி உள்ளதாக தெரிகிறது.இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட வின்சென்ட் உறவினர்கள் கூறுகையில், தனது மனைவி தஸ்நேவிஸ் முகத்தில் டார்ச் லைட் அடித்ததை  வின்சென்ட் கண்டித்தார். 2 வது முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளது. வேண்டுமென்றே வின்சென்ட்டை பழி தீர்த்துள்ளனர். இந்த கொலை வழக்கில்  வேகமாக விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கொலையாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். இது தொடர்பாக டி.ஐ.ஜி., எஸ்.பி.யை சந்திக்க உள்ளோம் என்றனர்.



Tags : fisherman ,murder ,Suchendham ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...