×

கீற்றுகொட்டகையில் இயங்கி வரும் திருவாரூர் தீயணைப்பு நிலையம்ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் புதிய கட்டிடம் கட்டுவதில் சிக்கல்

திருவாரூர், ஏப்.25:  திருவாரூரில் எந்த நேரத்திலும்  இடிந்து விழும் நிலையில் தீயணைப்பு நிலைய கட்டிடம்  உள்ளதால் அதற்கு அதிகாரிகள்  சீல் வைத்துள்ள நிலையில் தற்போது கூரைகொட்டகையில் இயங்கி வரும் அவலம் இருந்து வருகிறது. திருவாரூரில் ஏற்கனவே நீதிமன்றம் இயங்கி வந்த இடம் அருகே தீயணைப்பு நிலைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு ஓராண்டுக்கு  முன்னதாகவே  1946ம் ஆண்டு முதல் இந்த தீயணைப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தற்போது 3 பெரிய தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 1 சிறிய தீயணைப்பு வாகனம் என மொத்தம் 4 வாகனங்கள் இருந்து வருகின்றன. இதில் 40 பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் அலுவலகத்தில் தற்போது 20 பணியாளர்கள் மட்டுமே  பணியாற்றி வருகின்றனர். இதில் 2 ஷிப்ட் முறையில் பணியாளர்கள் பிரிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.  

இதில் இரவு நேர பணி என்பது மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரையில் 15 மணி நேரமும், பகல் பணி என்பது காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் 9 மணி நேரமும் ஆகும். இந்நிலையில் இரவு பணி என்றாலும், பகல் பணி என்றாலும் எந்த நேரத்திலும் அழைப்பு வரலாம் என்பதால்  மற்ற அலுவலர்களை போல இல்லாமல் இந்த தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தங்களது பணி நேரத்தில் கட்டாயம் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 70 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் திருவாரூர் தீயணைப்பு நிலைய அலுவலத்திற்காக புதிதாக இதே இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு கடந்த திமுக ஆட்சியின்போது ரூ. 40 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் மற்றும் அலுவலகத்தின் இடம் வருவாய் துறை பதிவேட்டில் நீதிமன்றத்திற்கு சொந்தமான இடமாக உள்ளதால் தீயணைப்பு நிலைய கட்டிடம் கட்டுவதில் தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஓதுக்கீடு செய்யப்பட்ட ரூ.40 லட்சம் தொகையும் அரசிடமே திரும்பி செல்லும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போது அலுவலக கட்டிடம், அலுவலர்கள் தங்கும் கட்டிடம் என  அனைத்தும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில்தான் காணப்படுகிறது. ஊரை காப்பாற்றுவதற்காக தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் தீயணைப்பு அலுவலர்கள் தங்களது பணியினை தொடர்ந்து செய்து வந்தனர்.
நாகை மாவட்டம் பொறையாரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டிடம்  கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20மதேதி இடிந்து விழுந்த சம்பவத்தில் அறையில் தங்கியிருந்த 8 தொழிலாளர்கள் பலியாகினர். இந்த கொந்தளிப்பு அடங்குவதற்குள் அடுத்த சம்பவமாக மறுநாளே (21ம் தேதி) நாகையில்  தீயணைப்பு நிலையத்தின் கட்டிட மேற்கூரை கட்டைகள் திடீரென பெயர்ந்து விழுந்த சம்பவம் ஏற்பட்டது.

இதனையடுத்து மாநிலம் முழுவதும் இதுபோன்று பழைய கட்டிடங்களுக்கு பொதுப்பணி துறையினர் பூட்டி சீல் வைத்த நிலையில் அதில் ஒன்றாக திருவாரூரில் இயங்கி வந்த தீயணைப்பு நிலையமும் பொதுப்பணி துறையினர் மூலம்  பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து இருந்த இடமும் பறிபோன நிலையில் அருகில் இருந்து வரும் சிறிய கொட்டகை ஒன்றில் கடந்த ஒன்றரை வருட காலமாக தீயணைப்பு அலுவலர்கள் தங்களது கோப்புகளையும், உடமைகளையும் வைத்து கொண்டு பணியாற்றி வரும் நிலை உள்ளது. மேலும் இங்கு பணியாற்றி வரும் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களாவார்கள்.  

இவர்களுக்கு சிறுநீர் கழிப்பதற்கு கூட உரிய கழிவறை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தீ விபத்து, சாலை விபத்து, மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் நீரில் மூழ்கும் போது மீட்பது மற்றும் பேரிடர் காலங்களில் தங்களது உயிரை துச்சமாக வைத்து  ஊருக்கே பாதுகாப்பு அளித்து வரும் இந்த தீயணைப்பு துறையினருக்கு உரிய இடவசதியின்றி கீற்று கொட்டகையில் வசித்து வருவது தீயணைப்பு வீரர்களிடம் வேதனையும், பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. எனவே திருவாரூர் தீயணைப்பு அலுவலத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruvarur ,firefighters ,
× RELATED திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!