×

தர்மபுரியில் அதிகாலையில் கைவரிசை சிறை கண்காணிப்பாளர், இன்சூரன்ஸ் அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

தர்மபுரி, ஏப்.25: தர்மபுரியில் நேற்று அதிகாலையில் சிறை கண்காணிப்பாளர் மற்றும் இன்சூரன்ஸ் அதிகாரி வீடுகளில் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தர்மபுரி அன்னசாகரம் வஉசி தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவர் சிறைத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கலைச்செல்வி. நேற்று முன்தினம் இரவு, வீட்டின் ஒரு அறையில் சண்முகமும், அவரது மனைவி ஹாலிலும் உறங்கி கொண்டிருந்தனர். அதிகாலை ஒரு மணியளவில், கொள்ளைக் கும்பல் திறந்திருந்த ஜன்னல் வழியாக கையை விட்டு, கதவின் தாழ்ப்பாளை திறந்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் கலைச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்தனர். தொடர்ந்து மஞ்சள் கயிற்றில் தாலிச் சரடு அணிந்திருந்ததை அறுத்து எடுக்க முயன்றபோது, அவர் விழித்துக்கொண்டு சத்தம் போட்டார். உடனே கொள்ளையர்கள் இருட்டில் தப்பி ஓடி மறைந்தனர். இதே கொள்ளையர்கள், சண்முகம் வீட்டில் கொள்ளையடிப்பதற்கு முன்பு, வீட்டின் எதிரே உள்ள பூ வியாபாரி செல்வம் என்பவரின் வீட்டு கதவின் பூட்டை உடைக்க முயற்சி செய்தனர். ஆனால், முடியாததால் அப்படியே விட்டு சென்று விட்டனர். இதேபோல், தர்மபுரி பாரதிபுரம் குமரபுரி காலனியைச் சேர்ந்தவர் அசோகன்(52). இவர் மத்திய அரசின் நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிர்வனத்தின் கேஷியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கரூலின் ராஜ்.

இவர் தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கணவன், மனைவி இருவரும் வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 2 மணிக்கு, மாடி வீட்டின் கதவின் பூட்டை உடைத்து முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் உள்ளே புகுந்தது. ஹோம் தியேட்டர் ஆடியோ பிளேயர், மகன்களின் இரண்டு கை கடிகாரங்களை கொள்ளையடித்த அந்த கும்பல், அறையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். இதில் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனது.

தரைதள வீட்டின் பூட்டை உடைத்து உள்ள செல்ல முயன்றபோது கணவன், மனைவி இருவரும் கூச்சலிடவே கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர். கொள்ளையர்கள் முகமுடி அணிந்திருந்தனர். இதே வீட்டில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு கொள்ளையர்கள் 6 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றிருந்தனர். பக்கத்து தெருவில் 2 பேர் வீட்டிலும் நகை, பணம் என 40 பவுன் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து, தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்திருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Venture robbery ,prison Superintendent ,Dharmapuri ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்