×

வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்

தர்மபுரி, மே 6: தர்மபுரி மாவட்டத்தில், புதிய பியூசிசி 2.0 வெர்சனை இன்று (6ம்தேதி) முதல் அனைத்து வாகன புகைப் பரிசோதனை மையங்களும் நிறுவி, அதன் மூலம் மட்டுமே வாகன புகைப் பரிசோதனைகளை செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில், 8 வாகன புகை பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. தினசரி 50 முதல் 60 வாகனங்களுக்கு இங்கு புகை பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எப்சி.,க்கு வரும் வாகனங்கள் மட்டுமே புகை பரிசோதனை சான்று பெறப்படுகிறது. மற்ற வாகனங்கள் புகை பரிசோதனை சான்று பெறுவதில்லை. இந்நிலையில், அனைத்து வாகனங்களுக்கும் புகை சான்று வாங்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கூறியதாவது:
சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில், வாகனங்களின் மூலம் வெளியிடப்படும் புகை அளவு அதிகரிக்கும் காரணத்தால், காற்று மாசுபாடு ஏற்பட்டு, நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் பொதுமக்களிடையே ஏற்படுகிறது. இதனை கட்டுக்குள் வைக்க, மாநிலம் முழுவதிலும் 534 வாகன புகைப் பரிசோதனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்த பரிசோதனை மையங்களில், ஒரு சிலவற்றில் வாகனங்களை கொண்டு வராமலேயே பரிசோதனை செய்யப்பட்டும், ஒருசிலவற்றில் அங்கீகரிக்கப்பட்ட சோதனை செய்யும் நபர் இல்லாமல் சான்றிதழ் வழங்கப்படுவதாக புகார்கள் வந்தது.

இதையடுத்து, கடந்த 13ம்தேதி (சனிக்கிழமை) மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாகன புகைப் பரிசோதனை மையங்களும் திடீர் தணிக்கை செய்யப்பட்டது. இதில் 50 புகை பரிசோதனை மையங்களில், அங்கீகரிக்கப்பட்ட சோதனை செய்ய வேண்டிய நபர் இல்லாமல் வேறொருவர் பணியில் இருந்தது, உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இயங்கியது தெரியவந்தது. வாகன புகைப் பரிசோதனை மையங்களில் செயல்பாட்டை மேலும் மேம்படுத்தவும், புகார்களுக்கு இடமளிக்காத வகையில் தொழில்நுட்பங்களை புகுத்தவும் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், தற்போது பியூசிசி 2.0 வெர்சன் (பொல்யூசன் அன்டர் கண்ட்ரோல் சர்டிபிகேட்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாகன புகைப் பரிசோதனை மையத்துக்கென தனிப்பட்ட தொலைபேசி, உரிமதாரரால் பயன்படுத்தப்படும். அந்த தொலைபேசியில் இந்த பியூசிசி 2.0 வெர்சன் அப்-ஐ நிறுவி இயக்க வேண்டும். இந்த புதிய வெர்சன் ஜிபிஎஸ் வசதியுடன் கூடியதாகும்.

இந்த செயலி நிறுவப்பட்ட தொலைபேசி தொடர்புடைய வாகன புகைப் பரிசோதனை மையத்திலிருந்து, 30 மீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே செயல்படும். இதன் மூலம் வாகன புகைப் பரிசோதனை செய்யும் போது, இரண்டு புகைப்படங்களை (ஒன்று வாகனத்தை பதிவெண்ணை தெளிவாக காட்டும்படியும், மற்றொன்று வாகனத்தின் பதிவெண், புகை பரிசோதனை மையத்தின் பெயர் பலகை அடங்கிய முழுத்தோற்றம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சோதனையாளர் ஆகிய மூன்றும் ஒருசேர இருக்குமாறு) எடுக்கப்பட வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட நபர் அந்த வாகனத்தை சோதனையிடும் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ பதிவையும் பதிவேற்ற வேண்டும். இவை பதிவேற்றம் செய்யப்பட்டால்தான் புகைப் பரிசோதனை சான்றிதழ் பதிவிறக்கம் செய்யவோ அல்லது பிரிண்ட் எடுக்கவோ இயலும். சோதனை செய்யப்படும் வாகனங்கள், அந்த புகை பரிசோதனை மையத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்யப்படுவதை துல்லியமாக காட்டும் புவியிடக் குறியீடு இருப்பதனால், சோதனை மையத்திற்கு வாகனங்களை கொண்டு வராமலேயே புகைப் பரிசோதனையை இனி செய்ய இயலாது.

மேலும், புகைப் பரிசோதனை மையங்கள், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கியுள்ள மென்பொருளை தங்களது கருவியை பொருத்தினால் மட்டுமே இந்த செயலி செயல்படும். இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக, தமிழ்நாட்டில் இந்த புதிய நடைமுறை இன்று (6ம்தேதி) முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த புதிய பியூசிசி 2.0 வெர்சன் குறித்த செயல்முறை விளக்கம், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனைத்து வாகன புகைப் பரிசோதனை மைய சோதனையாளர் மற்றும் உரிமைதாரர்கள் ஆகியோருக்கு, கடந்த 3ம்தேதி வழங்கப்பட்டது. இந்த புதிய பியூசிசி 2.0 வெர்சனை இன்று (6ம்தேதி) முதல் அனைத்து வாகனப் புகைப் பரிசோதனை மையங்களும் நிறுவி, அதன் மூலம் மட்டுமே வாகனப் புகைப் பரிசோதனைகளை செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் மையங்கள், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடி சீல் வைக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

The post வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Dharmapuri… ,Dinakaran ,
× RELATED நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்