×

கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புத்தன் அணை திட்டத்திற்கு மாற்று ஏற்பாடு ஜெனரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் இடமாற்றம்

நாகர்கோவில், ஏப்.24:  நாகர்கோவிலில் புத்தன் அணை திட்டத்திற்காக தற்போதைய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஜெனரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் ஆகியவற்றை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கின.நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் வழங்குவதற்காக புத்தன் அணை திட்டம், ரூ.250 கோடியில் நடைபெற்று வருகிறது.  இந்த திட்டத்துக்காக நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிதாக தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளது.  இதற்காக தற்போது உள்ள ஜெனரேட்டர் அறை, கட்டுப்பாட்டு அறை, டிரான்ஸ்பார்மர் உள்ளிட்டவை மாற்றம் செய்யப்பட உள்ளன. அதன்படி 500 கிலோ வாட் திறன் கொண்ட ஜெனரேட்டரை இட மாற்றம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. ஜெனரேட்டர் இணைப்பு கேபிள்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டப்பட்டு மாற்றப்பட்டன. மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டனர். புதிதாக அமைக்கப்பட உள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டி 200 மீட்டர் விட்டம் மற்றும் 6 மீட்டர் ஆழத்தில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.  

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், புத்தன் அணை திட்டத்துக்காக புதிய குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் நடக்கும் சமயத்தில் வழக்கமான குடிநீர் வினியோகத்தில் எந்தவித பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில், மாற்று ஏற்பாடுகள் நடக்கின்றன.  தற்போது ெஜனரேட்டர் அறை, கண்ட்ரோலர் அறை உள்ளிட்டவை மாற்றம் செய்யப்பட உள்ளன. அடுத்த கட்டமாக டிரா ன்ஸ்பார்மரும் மாற்றப்பட உள்ளது என்றனர்.  புத்தன் அணை திட்டம் செயல்பாட்டுக்கு வரும் சமயத்தில் மாநகர மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.  2020க்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

Tags : Krishnankoil Water Treatment Center Generator Room ,Transformer Transfer ,
× RELATED கொள்ளிடம் ஆற்றங்கரை தெருவில்...