×

திருத்துறைப்பூண்டியில் வெற்றிலை விலை உயர்வு

திருத்துறைப்பூண்டி, ஏப்.22: திருத்துறைப்பூண்டியில் வெற்றிலை விலை உயர்வால் கடைகளில் சில்லரை விலையில் வெற்றிலை விற்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் அனைத்து விழாக்களுக்கும் பயன்படுத்தப்படுவதில் ஒன்று  வெற்றிலையும் ஆகும். தாம்பூலத்தில் வெற்றிலைக்குதான் முதலிடம். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் வெற்றிலை விலை  குறையும். கோடைகாலத்தில் வெற்றிலை உற்பத்தி குறைவதால் வெற்றிலை விலை  அதிகரிக்கும். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி  பகுதிக்கு திருவையாறு , திருச்சி,  தென்காசி, மதுரை சோழவந்தான் போன்ற பகுதிகளில் இருந்து வெற்றிலை வருகிறது.சில மாதங்களுக்கு முன்பு வெற்றிலை தரத்தினை பொறுத்து ஒருகவுளி வெற்றிலை ரூ.50  முதல் ரூ.55 வரை விற்றது. தற்போது கோடைகாலம் என்பதால் வெற்றிலை உற்பத்தி  அதிகம் இல்லாததால் வெற்றிலை வரத்து குறைந்து விட்டது. அதனால் தற்போது ஒரு  கவுளி வெற்றிலை ரூ. 80 முதல் 85 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெற்றிலை கடைகளில்  சில்லரை விலையில் வியாபாரம் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வெற்றிலை வியாபாரி லோகு கூறுகையில், கோடை காலம் என்பதால்  வெற்றிலை வரத்து குறைந்ததால் தற்போது விற்கப்படும் மாறு வெற்றிலை ஒரு கவுளி  ரூ. 90 முதல் ரூ.95 வரை விற்கப்படுகிறது. கிளை வெற்றிலை ஒரு கவுளி  ரூ. 75 முதல் ரூ. 85 வரை விற்கப்படுகிறது. முதுகால் வெற்றிலை ஒரு கவுளி  ரூ.65 முதல் ரூ. 75 வரை விற்கப்படுகிறது. வெற்றிலை விலையேற்றம் எப்போது  குறையும் என்று வெற்றிலை வியாபாரிகளுக்கு தெரியாது என்றார்.

Tags : price hike ,
× RELATED காஸ் விலை உயர்வை கண்டித்து மணமக்களுக்கு மண் அடுப்பு பரிசு: வீடியோ வைரல்