×

வாக்குப்பதிவு, விவிபேட் இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

விழுப்புரம், ஏப். 18: விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகம், புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் 3,227 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த வாக்குச்சாவடிகளுக்கு 4,043 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,043 கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் 4,172 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 25 சதவீத இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இயந்திர கோளாறு ஏற்பட்டால் மாற்றுவதற்கு இவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே வாக்குப்பதிவு உள்ளிட்ட இயந்திரங்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு அந்தந்த மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் புகைப்படத்துடன் கூடிய சின்னங்கள் ஒட்டப்பட்டு தாலுகா அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று பிற்பகல் முதல் மண்டல அலுவலர்கள் தலைமையில் வாக்குச்சாவடிகளுக்கு அந்தந்த தாலுகா அலுவலகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டது.மாவட்டம் முழுவதும் 287 மண்டல அலுவலர்கள் தலைமையில் 3,227 வாக்குச்சாவடிகளுக்கும் இந்த வாக்குப்பதிவு, விவிபேட் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. விழுப்புரம் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட 284 வாக்குச்சாவடிகளுக்கும் மண்டல அலுவலர்கள் தலைமையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது. அவர்களுடன் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்புக்கு சென்றனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மாலை 6 மணிக்குள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் அளித்துவிட்டோம் என்பதை உறுதி செய்யவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 275 வாக்குச்சாவடி மையங்களுக்கு 23 லாரிகளில் விவிபேட் மிஷன் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குப்பதிவு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொகுதி உதவி தேர்தல் அலுவலர் ராஜேந்திரன், தாசில்தார் சுந்தர்ராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, மண்டல துணை தாசில்தார் பாண்டியன், தலைமையிடத்து துணை தாசில்தார் குபேந்திரன், தேர்தல் துணை தாசில்தார்கள் சிவா, அரிதாஸ் உட்பட வருவாய் துறை பணியாளர்கள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : Voting ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்கு வங்கியை...