×

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் படைவீரர்கள், போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்து அனுப்பி வைப்பு

திருவண்ணாமலை, ஏப்.17: திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவவீரர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதையொட்டி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லவும், வாக்குப்பதிவு முடிந்த பின் இயந்திரங்களை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வருவதற்கும் தேவையாக போலீஸ் பாதுகாப்பு அமைக்கும் பணி நேற்று திருவண்ணாமலை எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.

அதையொட்டி, போலீசார் மற்றும் முன்னாள் ராணுவீரர்கள் வரவழைக்கப்பட்டு, எஸ்பி சிபி.சக்கரவர்த்தி தலைமையில், தேர்தல் பணிகள் ஒதுக்கப்பட்டது. போலீசாருக்கும், முன்னாள் படைவீரர்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் அவர்கள் வாகனங்கள் மூலம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையில் உள்ள போலீசாருக்கு மாற்றாக துணை ராணுவீரர்களுக்கு பறக்கும் படையில் பணி ஒதுக்கப்பட்டது.முதற்கட்டமாக முன்னாள் படைவீரர்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு கணினியில் ரேண்டம் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரேண்டம் முறையில் பணி வழங்கப்பட்ட போலீசாருக்கு இன்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கான உத்தரவு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Ex-servicemen ,Tiruvannamalai district ,
× RELATED போளூரில் நெல் சாகுபடி அதிகரிப்பால்...