×

திருவண்ணாமலை, செங்கத்தில் பரபரப்பு: விவசாயிகள் கருப்பு கொடியேற்றி போராட்டம் திருவண்ணாமலை, செங்கத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை, ஏப்.16: 8 வழி பசுமைச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலை, செங்கத்தில் கருப்பு கொடியேற்றி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை- சேலம் இடையே 277 கிமீ தொலைவு 8 வழி பசுமைச்சாலை அமைக்கும் திட்டத்தை ₹10 ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தின் அரசாணையை ரத்து செய்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. மேலும், விவசாயிகளிடம் பறிமுதல் செய்த நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். வருவாய்த்துறை பதிவேடுகளில் செய்த வகைமாற்றங்களை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், சேலத்தில் நடந்த அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய, மத்திய நீர்வழி மற்றும் தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும். இத்திட்டத்தில் முதல்வர் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார் என்று பேசினார்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில், மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பேசியது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதனால், விவசாயிகள் கொதிப்படைந்தனர்.இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த சாலையனூர் கிராமத்தில் நேற்று விவசாயிகள், விளை நிலத்தில் கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், பசுமைச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் அழகேசன், அபிராமன் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது, மத்திய அமைச்சர் நிதின்கட்கரியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகும், இத்திட்டத்தை நிறைவேற்ற துடிக்கும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர்.
இதுகுறித்து, விவசாய சங்க நிர்வாகி அழகேசன் கூறுகையில், தமிழக விவசாயிகளை தொடர்ந்து மத்திய அரசு வஞ்சிக்கிறது. 8 வழிச்சாலை திட்ட அரசாணையை ரத்து செய்து கோர்ட் உத்தரவிட்ட பிறகும், மத்திய அமைச்சர் திட்டத்தை நிறைவேற்றுவதாக பேசியிருக்கிறார். அதேபோல், நீட் தேர்வு ரத்தாகாது என மற்றொரு மத்திய அமைச்சர் பேசுகிறார்.எனவே, விவசாயிகளின் எதிர்ப்பு உணர்வை வெளிபடுத்தும் வகையில் கறுப்பு கொடியேற்றி போராடுகிறோம். தொடர்ந்து மத்திய அரசு இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்றார்.

இதேபோல், செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தில் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாய அமைப்பினர் நேற்று கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு 8 வழிச்சாலை திட்ட ஒருங்கிணைப்பாளர் விநாயகம் தலைமை தாங்கி மத்திய அமைச்சர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், அப்போது அமைதியாக இருந்த எடப்பாடி மற்றும் பாமக நிறுவனர் ராமதாசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசினார்.

Tags : Thiruvannamalai ,Sengadu Thangal: Farmers black kodiyadi ,
× RELATED விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர்...