×

உளுந்தூர்பேட்டை அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி

உளுந்தூர்பேட்டை, ஏப். 14: விழுப்புரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தனித்தனியாக தீவிர வாகன தணிக்கை மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை உளுந்தூர்பேட்டை அருகே புத்தகமங்கலம் கிராமத்தில் பறக்கும் படை அதிகாரிகள் ரோந்து சென்ற போது அதிமுக கூட்டணியை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பூத் வாரியாக பட்டியல் தயார் செய்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது பறக்கும்படை அதிகாரிகள் பாமக கட்சியை சேர்ந்த இரண்டு பேரிடம் இருந்து ரூ.44,270 பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கட்டுக்கட்டாக வைத்து இருந்த பணத்துடன் அவர்கள் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் நேற்று அதிகாலை செங்குறிச்சி டோல்கேட் பகுதியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில், 108 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து ஆய்வு செய்ததில் உரிய ஆவணங்களை காட்டி வெள்ளி பொருட்களை எடுத்து சென்றனர்.
இதே போல் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி வந்த ஒரு மினிலாரியை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அந்த மினிலாரியில் செல்போன், துணி மற்றும் புடவைகள் உள்ளிட்ட சரக்கு பொருட்கள் இருப்பதாகவும், ஆனால் லாரியின் பின்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சீலை உடைக்க கூடாது என்றும் அதிகாரிகளிடம் டிரைவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து வந்த தகவலை அடுத்து அந்த மினிலாரி உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் இதுவரையில் தேர்தல் தொடர்பாக எந்த வாகனங்களும் வழக்கு பதிந்து பறிமுதல் செய்யப்படவில்லை, பிடிக்கப்படும் வாகனங்களும் உரிய ஆவணங்கள் உள்ளதாக கூறி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் மேற்பார்வையாளர் மற்றும் போலீசார் தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியாக உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் வாகன சோதனைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் தேர்தல் நெருங்குவதால் பல கோடி மதிப்பிலான பணம் மற்றும் புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்ய வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : voters ,Ulundurpet ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...