×

திருச்சி விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

ஏர்போர்ட், ஏப்.12:  திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து 3 பயணிகள் கடத்தி வந்த ரூ.23.90 லட்சம் மதிப்பிலான தங்கநகை மற்றும் தங்ககட்டிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து மூவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு உள்நாட்டிற்கும், வெளிநாடுகளுக்கும் விமான சேவை வசதி உள்ளது. அதேபோல் துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் திருச்சிக்கு விமானங்கங்கள் வந்து செல்கிறது. திருச்சி விமான நிலையத்தில் நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள், எலக்ரானிக்ஸ் பொருட்களை கடத்தி கொண்டு வருவதும், கடத்தல்காரர்கள் சுங்க அதிகாரிகளிடம் சிக்குவதும் தினமும் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது மறைத்து எடுத்து வந்த 297 கிராம் எடையுள்ள இரண்டு தங்க செயின் மற்றும் இரண்டு தங்க கொலுசுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.9.50 லட்சம் ஆகும். இதுகுறித்து முகமது இலியாசிடம் சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று மதியம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த மலிண்டோ விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தபோது சென்னையை சேர்ந்த ராஜேஸ்வரி (45) உடைமையில் மறைத்து எடுத்து வந்த 300 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். மேலும் சென்னையை சேர்ந்த முகமது சலீம் (46) என்பவர் உடைமையில் மறைத்து கொண்டுவந்த ரூ.4லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 150 கிராம் தங்க செயினை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tiruchirapalli airport ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் ரூ.66.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்