×

திமுக தேர்தல் அறிக்கையை படித்து பாருங்கள் எனக்கு ஓட்டு தானாக போடுவீர்கள்

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையை படித்து பாருங்கள். அதில் இருக்கும் கருத்துக்களால் கவரப்பட்டு எனக்கு தானாக முன் வந்து உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடுவீர்கள் என அரசு வேலைக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளிடையே தமிழச்சி தங்கபாண்டியன் கலந்துரையாடினார். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தியாகராயர் நகர் நடேசன் தெருவில் பிரசாரத்தை தொடங்கி துக்காராம் 1,2,3 தெருக்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க தொடங்கினார். துக்காராம் 3வது தெருவில் பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்த வேட்பாளர் தமிழச்சியை அந்த தெருவில் இருந்த மக்கள்  150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீபேரருளாளர் பெருமாள் கோயிலுக்குள் அழைத்து சென்றனர்.அர்ச்சகர் வேட்பாளருக்கு துளசி பிரசாதம் வழங்கினார். பெருமாள் அருளால் நீங்கள் நினைப்பது நிறைவேற வேண்டும் என்று உடன் வந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தி.நகரில் அரசு வேலை வாய்ப்புக்காக பயிற்சி தரும் தனியார் மையம் அருகே தமிழச்சி பிரசாரம் செய்தபோது, அந்த மையத்தின் நிறுவனர் சீமான் வரவேற்றார்.

அப்போது தனியார் மையத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த மாணவ, மாணவிகளிடையே தமிழச்சி கலந்துரையாடினார். ‘‘அரசு வேலைக்காக தயாராகி வரும் நீங்கள் தான் இந்த நாட்டின் எதிர்காலம். காசு, பணத்துக்காக விலை போக வேண்டாம். கறை படியாத கைகளுக்கு சொந்தக்காரர்களாக அரசு பணியில் துணிந்து செயல்படுங்கள். பெண்கள் பாதுகாப்பு கருதி, பாலியல் சம்பவங்களில் சிக்கிக்கொள்ளும் பெண்களின் பெயரை வெளியிடக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியும், இந்த ஆட்சியில் என்ன நடந்தது என்று அறிவீர்கள்.  ஆகவே, பெண்களின் பாதுகாப்பு குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் என்ன கூறி இருக்கிறது என்று படித்து பாருங்கள். நீங்கள் தானாகவே முன் வந்து எனக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடுவீர்கள்’’என்றார்.

பின்னர் காமராஜர் காலனியில் பிரசாரம் செய்தபோது, ஆதிராஜ்-பிரியங்கா தம்பதிகள் தங்களது 3 வயது குழந்தை பப்லூவிற்கு, கலைஞர் கருணாநிதி வேடமிட்டு அழைத்து வந்து வேட்பாளருக்கு இனிப்பு வழங்கினர்.
இந்த பிரசாரத்தின்போது சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், ஜெ.கருணாநிதி, பொன்னுரங்கம், பாரி, உதயசூரியன், வட்ட செயலாளர் மாரி, மகளிர் அணி பச்சையம்மாள், புஷ்பா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தி.நகர் இல.பாஸ்கரன், வேலு நாயக்கர், சக்தி ஆறுமுகம், பிரபாகரன்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தொகுதி செயலாளர் தினகர், செந்தில் குமார், தமிழ்முகிலன், சரளி, அருண், மணி, சந்துரு, ரமேஷ், தீனா, மனிதநேய மக்கள் கட்சி பிஸ்மில்லா கான், மீரான், சவுபர், சாதிக், மதிமுக பீடா கடை ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வேட்பாளருடன் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தனர்.

Tags : DMK ,
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்