×

தண்டையார்பேட்டையில் இன்சுலேஷன் டேப் தயாரிக்கும் கம்பெனியில் பயங்கர தீவிபத்து: 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

 

தண்டையார்பேட்டை, மே 25: தண்டையார்பேட்டையில் உள்ள இன்சுலேஷன் டேப் தயாரிக்கும் கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பொருட்கள் எரிந்து நாசமானது. சென்னை வேப்பேரியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர், தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகில், இன்சுலேஷன் டேப் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இதில், 8க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கம்பெனியை மூடிவிட்டு சென்றனர்.

இந்நிலையில், நள்ளிரவில் கம்பெனியில் தீவிபத்து ஏற்பட்டு, கரும்புகை வெளியேறியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகைம்மூட்டம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே சென்று பார்த்தபோது, கம்பெனியில் தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

இதையடுத்து, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், எஸ்பிளனேடு, கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி பகுதியில் இருந்து 9 தீயணைப்பு வாகனங்களில், தண்டையார்பேட்டை நிலைய அதிகாரி அஞ்சு புளி தலைமையில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கம்பெனியின் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் இருந்ததால் தீயை அணைப்பது சவாலாக இருந்தது.

சுமார் 5 மணிநேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் கம்பெனியில் உள்ளே இருந்த இன்சுலேஷன் டேப் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் எரிந்து நாசமானது. தகவலறிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் லோகநாதன் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்து குறித்து ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணையில், கம்பெனியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post தண்டையார்பேட்டையில் இன்சுலேஷன் டேப் தயாரிக்கும் கம்பெனியில் பயங்கர தீவிபத்து: 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Thandaiarpet ,Thandaiyarpet ,Manoj Kumar ,Vepperi, Chennai ,Vaidyanathan ,Dinakaran ,
× RELATED கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஓடும்...