×

வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு இணையவழியில் உரிமம்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தகவல்

 

தாம்பரம், மே 25: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு இணையவழி மூலம் உரிமம் வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அழகுமீனா தெரிவித்துள்ளார். தாம்பரம் மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் பிரிவின் கீழ், 3 நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், அனகாபுத்தூர், பாரதிபுரம் மற்றும் குண்டுமேடு ஆகிய இனக்கட்டுப்பாடு மையங்களில் தெருநாய்களுக்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதோடு, வெறிநாய் கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

அதனைத்தொடர்ந்து 1.2.2024 முதல் 30.4.2024 வரை 449 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு 437 தெருநாய்களுக்கு நாய்கள் இனக்கட்டுப்பாடு மையத்தில் கால்நடை மருத்துவ குழுவினரால் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை முடிந்து ஐந்து நாட்கள் வரை பராமரிக்கப்பட்டு, உடல் தகுதி பெற்ற பின் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு பிறகு பிடித்த இடத்திலேயே விடப்பட்டுள்ளது.

நாய் மற்றும் பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகள் வீடுகளில் வளர்க்கப்படும் நிலையில், இச்செல்ல பிராணிகள் பொது இடங்களில் உரிமையாளர்களால் அழைத்து செல்லப்படுகிறது. இவ்வாறான நிகழ்வில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி கட்டாயமாக போடப்பட்டிருக்க வேண்டும். மேலும், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு அவற்றின் உரிமையாளார்கள் உரிமம் அவசியம் பெற்றிட வேண்டும்.

நாய் மற்றும் பூனை ஆகிய செல்லபிராணிகளின் உரிமையாளர்கள் உரிமம் பெறுவதற்கு தாம்பரம் மாநகராட்சியின் https://tcmcpublichealth.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் உரிமையாளர்கள் 20.6.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பங்களை மாநகராட்சியின் பொது சுகாதர பிரிவு கால்நடை மருத்துவ அலுவலர் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையின் மருத்துவர் குழு இணைந்து ஆய்வு செய்து ஒரு மாத காலத்திற்குள் உரிமச்சான்று மாநகராட்சி நகர்நல அலுவலர் அவர்களால் வழங்கப்படும்.  இதன் வாயிலாக தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட செல்லப் பிராணிகள் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்படுவதன் மூலம் பொதுமக்களின் நலனை பாதுகாக்க உறுதி செய்யப்படும். எனவே, தாம்பரம் மாநகராட்சியின் இணையதளத்தில் செல்லப்பிராணிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்து, தங்கள் செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தை பெற்று பயனடையுமாறு மாநகராட்சி சார்பில் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா கேட்டுக் கொண்டுள்ளார்.

The post வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு இணையவழியில் உரிமம்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Tambaram Municipal Corporation ,Commissioner ,Akummeena ,Public Health Department ,3 Dog Breed Control Centers ,Dinakaran ,
× RELATED செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெற 20ம்...