×

ஜிஎஸ்டிக்குள் வந்தால் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ₹20 குறையும் காங். வேட்பாளர் வசந்தகுமார் பிரசாரம்

நாகர்கோவில், ஏப்.5: பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டிக்குள் வந்தால் லிட்டருக்கு ₹20 குறையும் என்று கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் தெரிவித்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் நேற்று காலை களியக்காவிளையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்குள்ள மார்க்கெட்டில், காய்கறி, மீன், பழங்கள், இறைச்சி வியாபாரிகளிடம் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பின்னர் பளுகல், மேல்பாலை, புலியூர்சாலை, அம்பலக்காலை, முக்கூட்டுக்கல், களியல், காட்டாவிளை உள்ளிட்ட இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது அவருடன் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், விஜயதரணி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ லீமாரோஸ் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

 அப்போது வசந்தகுமார் பேசியதாவது: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியின் தேர்தல் அறிக்கையை கொடுத்துள்ளார். அதில் ஏழை குடும்பங்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உலகத்தில் இதுபோன்ற ஒரு திட்டத்தை யாரும் கொண்டுவந்தது இல்லை. ஏழைகளுக்கு வருடத்திற்கு 72 ஆயிரம் கொடுக்கும் திட்டத்தை ராகுல்காந்தி இப்போது கொடுத்துள்ளார். அதை மக்களிடம் நாம் எடுத்து சொல்ல வேண்டும். நானும் உங்களைபோன்று ஒரு வியாபாரம் செய்பவன்தான். ஜிஎஸ்டியால் வியாபாரிகள் என்னென்ன கஷ்டங்கள் அடைந்தனர் என்பது எனக்கு தெரியும். அதனால்தான் வியாபாரிகளுக்கு ஒரே வரி என்று ஜிஎஸ்டி முறைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். அதனை போன்று பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியில் கொண்டு வந்துவிடுவோம் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு, வாகனங்கள் பயன்படுத்தும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் வரை குறையும். நீட் தேர்வு, பள்ளி மாணவ மாணவியர் பயந்து எழுதினர். அவர்களின் டாக்டர் கனவு கலைந்தது. இப்போது நீட் தேர்வு இல்லை என்று ராகுல்காந்தி கூறிவிட்டார். எனவே ராகுல்காந்தி கரத்தை வலுப்படுத்த கை சின்னத்திற்கு  நீங்கள் வாக்களிக்க வேண்டும். திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம் ஆகியவற்றின் ஆதரவோடு உங்களின் மூலம் வெற்றிபெறுவேன். அந்த வெற்றி உங்களுக்குத்தான் சொந்தம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து மாலையில் போங்காலை, கோதையாறு, சிற்றார் சிலோன் காலனி,  இரவு மருதம்பாறை, பத்துகாணி, ஆறுகாணி பிரசாரம் செய்த அவர் களியல் பகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

Tags : Vasanthakumar ,campaign ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...