×

தாரமங்கலத்தில் உயிர் பலிக்கு காத்திருக்கும் திறந்த வெளி சாக்கடை

தாரமங்கலம் மார்ச் 29:  தாரமங்கலம் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம், சந்தை மற்றும் அனைத்து பேருந்து வழித்தடங்களில் சாலையோரம் சாக்கடை கால்வாயானது திறந்த நிலையிலேயே காட்சியளிக்கிறது. தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர், சேலம் செல்லும் பிரதான சாலையோரங்கலில் ஆபத்தான நிலையில் கிணறு போன்ற அகலமான சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அந்த வழியில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் ஆயிரக்கணக்கில் காலை, மாலை இரு வேளையும் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும்போது கார், பேருந்து போன்ற வாகனங்களை கண்டு ஓரமாக ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி சாக்கடை கால்யில் விழுந்து எழுந்து செல்வது தொடர் கதையாகி வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் பேரூராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தாரமங்கலம் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாய்கள் நீண்ட நாட்களாகவே திறந்த நிலையிலேயே காணப்படுகிறது. உயிர்பலிக்கு காத்திருக்கும் சாக்கடை கால்வாய்களை பாதுகாப்பாக மூட வேண்டுமென கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொடிருந்த மாணவன் எதிரே வேகமாக வந்த வாகனத்தை கண்டு சாலையோரம் ஒதுங்கிய போது தவறி சாக்கடையில் விழுந்து கூச்சலிட்டான். உடனே, அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் உடன் வந்த மாணவர்களும் விரைந்து செயல்பட்டு மாணவனை மீட்டு குளிக்க வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், சிறு சிறு விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சாக்கடை கால்வாய்களை சிலாப் கற்கள் கொண்டோ அல்லது சிமென்ட் பூச்சு மூலமோ மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : survival ,Tharamangalam ,
× RELATED நாமக்கல் தொழிலதிபர் வீட்டில் ரூ.4.8 கோடி...