×

தமிழகத்தில் பல லட்சம் கோடி மதிப்பிலான தாது பொருட்களை கொள்ளையடிக்கவே மேகதாது அணை திட்டத்திற்கு பாஜ ஆதரவு

ஆத்தூர், மார்ச் 29:சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கௌதம சிகாமணியை ஆதரித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் பாசிச சக்திக்கும், ஜனநாயகத்துக்கும் நடக்கும் போராட்டம் ஆகும். இதில், ஜனநாயகம் தலை தூக்கிட திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும். தமிழகத்தில் இன்றைக்கு 80 லட்சம் இளைஞர்கள், வேலையின்றி இருக்கிறார்கள். பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என கூறினார். ஆனால், இன்றளவும் ஒருவருக்கு கூட வேலை வழங்கப்படவில்லை.  இங்கே வணிகர்கள் படும் துயரங்களை எல்லாம் உணர்ந்திருக்கிறோம். அந்நிய முதலீடுகளை இந்தியாவில் கொண்டு வந்து, இங்குள்ள ஏழை விவசாயிகள், வியாபாரிகள் என அனைவரையும் அழிக்கின்ற பணியை தான் பாரதிய ஜனதா ஆட்சி 5 ஆண்டு காலமாக செய்தது. தமிழக விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து, டெல்லியிலேயே 6 மாத காலம் கொட்டும் பனியிலும், கொளுத்தும் வெயிலிலும் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை 5 நிமிடம் கூட சந்திக்க மறுத்தவர் தான் மோடி. விவசாய கடன், கல்விக் கடன் தள்ளுபடி செய்ய முடியாது என அறிவித்தார். ஆனால், பன்னாட்டு கம்பெனி நிறுவனங்களுக்காக ₹2 லட்சத்து 18 லட்சம் கோடியை தள்ளுபடியாக அறிவித்தார்.

தமிழகம் இருண்ட பூமியாக, வறண்ட பூமியாக மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் மேகதாது அணை திட்டத்தை, பாரதிய ஜனதா ஆதரித்து வருகிறது. தமிழகம் வறண்டு போனால், தமிழக பூமியிலே இருக்கின்ற பல லட்சம் கோடி தாது பொருட்களை எடுக்க வாய்ப்பாக இருக்கும் என்பதால், மேகதாது திட்டத்தை மறைமுகமாக ஊக்குவித்து வருகிறது. இதுபோன்ற தமிழகத்தின் வளர்ச்சியினை பாதிக்கின்ற, வாழ்வாதாரத்தை அழிக்கின்ற செயலில் ஈடுபட்டிருக்கும் பாரதிய ஜனதாவை தூக்கி எறிய வேண்டும். பன்னாட்டு நிறுவனத்திற்கு ஆதரவாக தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி அரசு நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மத்திய அரசின் கைக்கூலியாக, எடுபிடியாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி அரசை தூக்கி எறிய, நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு வைகோ பேசினார்.அவருடன் திமுக வேட்பாளர் கௌதம சிகாமணி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னதுரை, குணசேகரன், தமிழ்ச்செல்வன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.

Tags : BJP ,millions ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நிலக்கரி...