×

பித்தளை விளக்குகள் பறிமுதல்


விழுப்புரம், மார்ச் 29:  விழுப்புரம் அருகே பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில், உரிய ஆவணம் இல்லாமல் காரில் செல்லப்பட்ட 132 காமாட்சியம்மன் விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடந்தது. விழுப்புரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர், பாமக உள்பட 14 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இன்று மாலை போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியாகிறது. இதனிடையே தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தொகுதிக்கு 3 பறக்கும்படை வீதம் மாவட்டம் முழுவதும் 33 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டும், நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விழுப்புரம் அருகே ஏ.கே குச்சிப்பாளையம் பகுதியில் பறக்கும் படை அலுவலர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் விழுப்புரம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது காரின் பின்பகுதியில் சாக்கு மூட்டையில் 132 பித்தளை காமாட்சியம்மன் விளக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காரில் இருந்த விழுப்புரம் திருவிக வீதியை சேர்ந்த சிதம்பரம் மகன் மதன்(18) என்பவரிடம் விசாரணை நடத்தியபோது, புதுச்சேரிக்கு பாலீஷ் போடுவதற்காக கொண்டு செல்வதாக கூறினார். அப்போது புதுச்சேரிக்கு செல்லாமல், விழுப்புரம் நோக்கி ஏன் வந்தீர்கள் என கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். மேலும் விளக்குகளுக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை பறிமுதல் செய்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் குமாரவேலிடம் ஒப்படைத்தனர்.தொடர்ந்து அவரிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தியபோது, பாலீஷ் போடுவதற்காகவும், விற்பனைக்கு அல்ல என்ற பில்லையும் காண்பித்துள்ளார். அதே சமயம் கேஷ் பில் என மொத்த விற்பனை பில்லையும் எடுத்துவந்து கொடுத்ததால், அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்பட்டதாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர். தொடர்ந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள காமாட்சியம்மன் விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
 
மேலும் பறக்கும்படை அலுவலர் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கான நிலையான கண்காணிப்புக் குழு ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் அரிகிருஷ்ணன், தலைமை காவலர் சுந்தர், காவலர் வீரபத்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக ஒரே பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர். இதில் இவர்கள் முருக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பழ வியாபாரி மகாதேவன் (53), அதே ஊரை சேர்ந்த வேலு மகன் தர்மதுரை (29), திரிசங்கு மகன் ராஜ்குமார்(28) என தெரிய வந்தது.இவர்கள் முருக்கம்பாடியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்றதாக தெரிவித்தனர். மகாதேவனிடம் சோதனையிட்டபோது அவரிடம் ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் பணம் இருந்தது. அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து திருக்கோவிலூர் வட்டாட்சியர் சிவசங்கரனிடம் ஒப்படைத்தனர். மேலும் மகாதேவன், தர்மதுரை, ராஜ்குமார் ஆகிய 3 பேரிடமும் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை