×

ஓமலூர் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவரை அனுமதிக்காமல்

வெளியில் படுக்க வைத்த அவலம்ஓமலூர், மார்ச் 27: ஓமலூர் அருகே, அடிதடி தகராறில் தலையில் காயத்துடன் வந்தவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்து வெளியே தள்ளிவிட்டனர். இதனால், அவர் மருத்துவமனை வளாகத்திலேயே மயங்கி கிடந்தார். புரோக்கர்கள் பிரச்னையால் நோயாளியை உள்நோயாளியாக அனுமதிக்க மருத்துவர் மறுத்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. ஓமலூர் அருகே பண்ணப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(35). கூலி தொழிலாளியான இவரது மனைவி அலமேலு. இந்நிலையில், அப்பகுதியில் நடைபெற்ற கோயில் விழாவில் சிலம்பரசனுக்கும், கார்த்திக் என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அலமேலுவை கார்த்திக் தாக்கியுள்ளார். இதை கண்ட சிலம்பரசன் தடுக்க முயன்றார். அப்போது, கார்த்தி அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து சிலம்பரசனை தாக்கினர்.  இதில், மண்டை உடைந்த சிலம்பரசன் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள், தலையில் காயம் இருப்பதால் சேலம் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்துவருமாறு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில், ஸ்கேன் எடுத்துக்கொண்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் சிலம்பரசன் வந்தார். ஆனால், உள்நோயாளியாக அனுமதிக்க முடியாது. உன்னை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியாகி விட்டது. அதனால், நீ அங்கே தான் சிகிச்சை எடுக்க வேண்டும் என கூறி வெளியே அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதனால், தலையில் காயமடைந்த சிம்பரசன் வேறு எங்கும் செல்ல முடியாமல் மருத்துவமனை வளாகத்திலேயே தரையில் படுத்துகொண்டார். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சிலம்பரசன் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டார். இருந்தபோதும் புரோக்கர்கள் மூலம் வராததால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாது. புரோக்கர்களை கவனித்தால் மட்டுமே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் என கூறி மிரட்டியதாக தெரிகிறது. ஓமலூர் அரசு மருத்துவரின் மனிதாபிமானமற்ற இந்த செயல் அந்தபகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : injured ,Omalur Government Hospital ,
× RELATED திருப்பத்தூரில் தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து