×

செம்பனார்கோவில் அருகே நடுக்கரை மேலப்பாதி பாலம் சீரமைக்கப்படுமா? 13 கிராம மக்கள் எதிர்பார்ப்பு

செம்பனார்கோவில், மார்ச் 27: செம்பனார்கோவில் அருகே நடுக்கரை மேலப்பாதி பாலத்தை சீரமைக்க வேண்டும் என 13 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் இருந்து மேலப்பாதி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு சிமெண்ட் பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 1955ம் ஆண்டு கட்டப்பட்டது. மேலப்பாதி, மருதூர், கருவாழைக்கரை, மேலையூர், கஞ்சாநகரம், கீழிருப்பு, மணக்குடி, ஆலவெளி, சேமங்கலம், கொண்டத்தூர், பாகசாலை, நத்தம், எருமல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள், அலுவலர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கண்ட பாலத்தின் வழியாகதான் செம்பனார்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வங்கிகள், பள்ளிகள், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள், போலீஸ் நிலையம், உதவி கல்வி அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், இந்திய உணவு கழகம், ஒழுங்கற்ற விற்பனைக்கூடம், வேளாண்மை அலுவலகம், வன விரிவாக்க அலுலகம், வணிக நிறுவனங்கள் போன்றவற்றிற்கு சென்று வருகின்றனர்.  

இதனால் பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலம் தற்போது கவனிப்பாரற்று சேதமடைந்துள்ளது. பாலத்தின் கீழ் பகுதியில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும் தூண்களின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு அந்த தூண்களில் உள்ள செங்கற்களும் வெளியே தெரிகிறது. மேலும் பாலத்தில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு செடிகள் முளைத்துள்ளன. இதனால் பாலம் வலுவிழந்து ஆபத்தான நிலையில் உள்ளது.  எனவே, சேதமடைந்த பாலத்தை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Nagakaruppalai Bridge ,Sembanarko ,
× RELATED செம்பனார்கோவில் வட்டாரத்தில் 15,635...