×

குளித்தலையில் திடீரென கோடை மழை: வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

குளித்தலை, மே 12: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் முதல் கட்ட நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டு கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தனர். அப்போது வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் பம்பரம் போல் சுற்றி தங்களது பிரசாரத்தை முடித்தனர். தொடர்ந்து தொடர்ச்சியாக வெப்பத்தின் தாக்கம் அதிகமானதால் பல்வேறு கிராமப்புற நகர்புறங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு கிராம பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் வெப்பத்தின் தாக்கத்தை போக்க நகர்ப்புற கிராமப்புறங்களில் நீர் மோர் பந்தல் ஆங்காங்கே அமைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது தாகத்தை தீர்த்தனர். மேலும் இளநீர் நுங்கு தர்பூசணி போன்ற பானங்களை பருகி உடல் சூட்டை தணித்து வந்தனர்.

தற்போது கோடை காலம் என்பதால் பெயிலின் தாக்கம் எந்த ஆண்டு விட இந்த ஆண்டு கூடுதலாக அடித்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை கரூர் மாவட்டம் குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய திடீரென கோடை மழை பெய்தது. இதனால் சாலை ஓரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பகலிலே வாகனங்கள் முகப்பு விளக்கு எரிய விட்டவாறு சென்றன. சாலையோரம் மற்றும் வாகனங்களில் சென்றவர்கள் திடீரென பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்து நனைந்தபடியே பயணம் செய்தனர் தெருக்களில் சிறார்கள் மழை பெய்தவுடன் தண்ணீரில் நனைந்து மகிழ்ச்சியுடன் ஆட்டம் போட்டு மகிழ்ந்தனர்.

The post குளித்தலையில் திடீரென கோடை மழை: வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Khuthalai ,Kulithalai ,Tamil Nadu ,
× RELATED குளித்தலையில் முதுகு தண்டுவட மாற்று அறுவை சிகிச்சை இலவச மருத்துவ முகாம்