நெல்லை, தென்காசி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நெல்லையில் 7 சுயேட்சைகள் மனு

நெல்லை, மார்ச் 26:  நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் 6 பேரும், தென்காசி (தனி) தொகுதியில் சுயேட்சையாக ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி என மொத்தம் 7 பேர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சுயேச்சை வேட்பாளர்களாகப் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (26ம் தேதி) நிறைவடைகிறது. இதனால் நேற்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நெல்லை கலெக்டர் அலுவலக சாலையில் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களின் கூட்டம் அலை மோதியது. இதையடுத்து நெல்லை நாடாளுமன்றத் தொகுதிக்கு நேற்று சுயேட்சை வேட்பாளர்கள் 6 பேர் கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீசிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்கள் விவரம்: நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகேயுள்ள விஜயம் அச்சம்பாட்டை சேர்ந்த சுப்பிரமணியன் மகளும் எம்பிஏ படித்தவருமான இந்திராணி (34), நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகனும், 8ம் வகுப்பு படித்தவருமான தளபதி முருகன் (44), பணகுடி சர்வோதயா நகரை சேர்ந்த திரவியம் மகனும் எம்ஏ எல்எல்பி படித்த வக்கீலுமான பகவதிகேசன் (44), ராதாபுரம் அருகேயுள்ள மதகனேரியைச் சேர்ந்த ராமையா மகனும் எம்சிஏ படித்தவருமான செல்வகணேசன் (45), நெல்லை பேட்டை செந்தமிழ் நகரை சேர்ந்த கணபதி மகனும் பிஎச்டி டாக்டர் பட்டம் பெற்றவருமான மணிகண்டன் (48), பாளை ரகுமத்நகரை சேர்ந்த ஆறுமுகம் மகனும் பிஎஸ்சிபிஎல் படித்த வக்கீலுமான மோகன்ராஜ் (52) ஆகிய 6 பேர் நெல்லை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட நெல்லையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதே போல் தென்காசி நாடாளுமன்ற (தனி) தொகுதிக்கு நெல்லையில் சுயேட்சை வேட்பாளராக பாளை மனகாவலம் பிள்ளை நகரை சேர்ந்தவரும் பிஎஸ்சி படித்தவரும், ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பியுமான சிவ ஜெயபிரகாஷ் (69) என்பவர் போட்டியிட விரும்பி  மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். சிவ ஜெயபிரகாஷ், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியனின் அண்ணன் ஆவார்.

Related Stories:

>