×

கரூர் தாந்தோன்றிமலை அடிப்படை வசதியில்லாத வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பொதுமக்கள் அவதி

கரூர், மார்ச் 14:  கரூர் தாந்தாந்தோன்றிமலை உள்ள வீட்டு வசதி வாரிய  குடியிருப்பு வளாகத்தில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என  இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் தாந்தோன்றிமலை அருகே வீட்டு  வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. அரசு ஊழியர்கள் முதல் பல்வேறு அரசு  அலுவலகங்களில் பணியாற்றி வரும் அனைத்து தரப்பினர்களும் இந்த வளாகத்தில்  குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டு  50 ஆண்டுக்கும் மேலாகிறது. 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து  வருகின்றனர். இந்த வளாகத்தில் இரண்டு பிளாக்குகள் மட்டும்  பழுதடைந்துள்ளதால் குடியிருப்புகள் இங்கு இல்லை. மேலும், குடியிருப்பு  வளாகத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தாலும்  பெரும்பாலானவை பழுதடைந்த நிலையில்தான் உள்ளன. இந்த வளாகத்தில் உள்ள  குடிநீர் தேக்கி வைக்கும் தொட்டி மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனை  சீரமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். இதே  போல், குடியிருப்பு வளாக பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை  வடிகால் சரிவர தூர்வாரப்படாத காரணத்தினால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு,  இந்த பகுதியை சுற்றிலும் வசிக்கும் பொதுமக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகி  வருகின்றனர். வளாகத்தின் மையப்பகுதியில் சாக்கடை வடிகால்கள் அனைத்தும்  உடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது, உடைந்த சாக்கடை வடிகாலில்  அகற்றப்படாத நிலையில், மரக்கிளையும் கடந்த பல ஆண்டுகளாக அகற்றப்படாமல்  உள்ளன. இதனை அகற்றி, சீரான முறையில் சாக்கடை வடிகால் செல்ல வழிவகை  ஏற்படுத்திட வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை சம்பந்தப்பட்ட  அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல்  உள்ளன.

மேலும், இந்த குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் சிறுவர்,  சிறுமிகளின் நலன் கருதி, சிறிய அளவில் பூங்காவும் அமைத்து தரப்பட்டுள்ளது.  ஆனால், அதில் உள்ள உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்து, பயன்படுத்திட முடியாத  நிலையில் உள்ளதால், சிறுவர் சிறுமிகள், வெளிப்புற பகுதிகளில்தான் விளையாடி  வருகின்றனர். பயனற்ற நிலையில் பூங்கா வளாகம் உள்ளதால், துவைத்த துணிகளை  காய வைக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. அடிக்கும் வெயிலுக்கு துணிகள்  அனைத்தும் உடனடியாக காய்ந்து விடும் அளவுக்கு பூங்கா உபகரணப் பொருட்கள்  வேறு வகையில் பயன்பாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த  பூங்காவை சீரமைத்து புதிதாக உபகரணங்கள் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும்  பலமுறை இந்த பகுதியினர் புகார் தெரிவித்தும் கண்டும் காணாத நிலையே நிலவி  வருகிறது. எனவே, பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி மோசமான நிலையில் உள்ள  இந்த தாந்தோன்றிமலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்துக்கு தேவையான  வசதிகளை செய்து தர சம்பந்தப்பட்டவர்கள் முயற்சி செய்ய வேண்டியது  அவசியமாகும் என்பதே குடியிருப்புவாசிகளின எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : housing residency residents ,Karur Dantondolimai ,
× RELATED மாவட்டம் முழுவதும் 173.1 மிமீ பதிவு கரூரை குளிர்வித்த 2 மணி நேர மழை