×

கோவளம் பகுதியில் அமைந்துள்ள மர கிடங்கில் 28 கொத்தடிமைகள் மீட்பு; அதிகாரிகள் அதிரடி

திருப்போரூர், மார்ச் 8: சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகே குன்றுக்காடு கிராமத்தில் பொன்மார் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் என்பவருக்கு சொந்தமான மர கிடங்கு உள்ளது. இங்கு விறகு மற்றும் பலகைகள் செய்யும்  பணி நடைபெறுகிறது. இந்த மர கிடங்கில், கொத்தடிமைகளாக தொழிலாளர்கள் உள்ளதாக புகார்கள் வந்தன. இதையடுத்து செங்கல்பட்டு ஆர்டிஓ முத்துவடிவேல், திருப்போரூர் வட்டாட்சியர் பிரபாகரன் உள்பட அதிகாரிகள் நேற்று மாலை அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் ஆரூர் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தில் பெரியவர்கள், சிறுவர்கள் உள்பட 28 பேர் கொத்தடிமையாக இருப்பது தெரிந்தது. அவர்களுக்கு 3000 முன்பணம் கொடுத்து, பல காலமாக வேலையில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஜெயபால் மீது கேளம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், கொத்தடிமையாக இருந்தவர்களை மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்ப, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர்களின் வங்கி கணக்கில் நிதியுதவி அளிக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக  ஆர்டிஓ தெரிவித்தார்.

Tags : coral reefs ,warehouse ,area ,Kovalam ,
× RELATED கும்மிடிப்பூண்டி சிப்காட் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து