×

செங்கல்பட்டு அருகே பரபரப்பு அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: டிரைவர் உட்பட 10 பேர் காயம் ; 3 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு, மே 21: செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில், ஆம்னி பேருந்து டிரைவர் உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு லோசான காயம் ஏற்பட்டது. இதனால், சுமார் 3 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இச்சம்வத்தால் அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. வாரவிடுமுறை முடிந்ததால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கின. இதனால், செங்கல்பட்டு அடுத்த மஹேந்திராசிட்டி அருகே சிக்னலில் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது திருச்செங்கோடு பகுதியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து ஒன்று பயங்கரமாக மோதியது. இதனையடுத்து, ஆம்னி பேருந்துக்கு பின்னால் வந்த வேன் மற்றும் கார் என அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில், அதிர்ச்சியடைந்த ஆம்னி பேருந்து பயணிகள் 50க்கும் மேற்பட்டோர் பேருந்தில் இருந்து குதித்து அலறியடித்து ஓடினர். இதில், 10க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர், அவர்கள் வேறு பேருந்துகளில் சென்னைக்கு பயணித்தனர். இந்த விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுனருக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வண்டலூர் போக்குவரத்து போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இதில், அடுத்தடுத்து 2 கார்கள் என 5 வாகனங்கள் சேதமடைந்தன. சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருந்தபோது ஆம்னி பேருந்து வேகமாக வந்ததால் இந்த விபத்து நடைபெற்று இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இதன் காரணமாக சென்னையின் நுழைவாயிலான செங்கல்பட்டில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post செங்கல்பட்டு அருகே பரபரப்பு அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: டிரைவர் உட்பட 10 பேர் காயம் ; 3 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை