×

வள்ளியூரில் பராமரிப்பு இல்லாததால் பாழடைந்து வரும் சிறுவர் பூங்கா

வள்ளியூர், மார்ச் 7: வள்ளியூரில் அதிகாரிகள் அலட்சியத்தால் பராமரிப்பின்றி சிறுவர் பூங்கா பாழடைந்து வருகிறது. வள்ளியூர் திருவள்ளுவர் கலையரங்கு தெருவில் வள்ளியூர் பேரூராட்சி சார்பில் சிறுவர் பூங்கா உள்ளது. இங்கு மாலை நேரங்களில் சிறுவர்கள், குழந்தைகள் பெற்றோருடன் வந்து பொழுதை போக்குவர். இந்த பூங்கா கட்டப்பட்டு 13 ஆண்டுகளான நிலையில், இதுவரை பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனருகே அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர்களும், இப்பூங்காவில் விளையாடி மகிழ்வது வழக்கம். முறையான பராமரிப்பு இல்லாததால் பூங்காவின் சுற்றுச்சுவர்கள் உடைந்து கிடக்கின்றன. மின்விளக்குகளும் சரியாக எரிவதில்லை. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகளின் புகலிடமாகவும் மாறி வருகிறது. இதனால் குழந்தைகளும், பெற்றோரும் பூங்காவிற்கு வரவே அஞ்சுகின்றனர். சமீபகாலமாக இரவு நேரங்களில் குடிமகன்கள் கூடாரமாக மாறி வருவதால், அவர்களது அட்டகாசம் அதிகரித்து உள்ளது. மேலும் பூங்காவின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டை காணவில்லை. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி, பராமரிப்பு இல்லாததால் நீர் கசிவு காணப்படுகிறது. இப்பூங்கா அருகே உள்ள நவீன கட்டண கழிப்பறையில் இருந்து வெளியேறும் தண்ணீர், பூங்காவில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. ஆடு, மாடுகள் புகலிமாகவும், வாகனங்கள் நிறுத்துமிடமாகவும் பூங்கா மாறியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பூங்காவை சீரமைப்பதுடன் சுற்றுச்சுவரை புதிதாக கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : Vallur ,
× RELATED வல்லூர் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்