×

இரட்டை இலை கிடைக்காதது எங்களுக்கு பின்னடைவு அல்ல அமமுக 40 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டி

நாகர்கோவில், மார்ச் 6: குக்கர் சின்னம் நிச்சயம் எங்களுக்கு கிடைக்கும், அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம்  என்று அ.ம.மு.க  துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று காலை குமரி மாவட்டம் வந்தார். அவருக்கு அஞ்சுகிராமத்தில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: இரட்டை இலை சின்னம் கிடைக்காதது எங்களுக்கு பின்னடைவு அல்ல, தேர்தலில் சின்னம் என்பது ஒரு பொருட்டே அல்ல. மக்களும், ஜெயலலிதாவின் தொண்டர்களும் எங்களுடன் இருக்கின்றனர். புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அமமுக போட்டியிட்டு வெற்றி பெறும். போட்டியிடும் வேட்பாளர்களை பொறுத்தே மக்கள் தங்கள் வாக்குகளை அளிப்பர். அமமுகவை மக்கள் நன்கு கவனித்து வருகின்றனர். ஆர்.கே.நகரில் வெற்றிபெற்ற குக்கர் சின்னம் தமிழகம் முழுவதும் பிரதிபலிக்கும், மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் உள்ளனர். அதனால் சின்னங்களுக்கு முக்கியத்துவம் கிடையாது.

அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம், குக்கர் சின்னம் நிச்சயம் எங்களுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து கொட்டாரம் வந்த டி.டி.வி. தினகரன் அங்கு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். அங்கிருந்து சாமிதோப்பு சென்று அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதிக்கு வந்தார். அவரை  பாலபிரஜாபதி அடிகளார் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் சாமிதோப்பு தலைமைப்பதியில் சாமி தரிசனம் செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சாமிதோப்பு தலைமைப்பதி பிரச்னை குறித்து அனைவரும் அறிவர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது, சாமிதோப்பு தலைமைப்பதி குறித்த அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என உறுதி அளித்திருந்தார். ஆனால் தற்போதைய எடப்பாடி அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

அமமுக ஆட்சிக்கு வந்தால் சாமிதோப்பு பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் தனி அரசாணை பிறப்பிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதன் பின்னர் நாகர்கோவில் வந்த அவருக்கு செட்டிக்குளம் சந்திப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தை டிடிவி தினகரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென் மண்டல பொறுப்பாளர்கள் மாணிக்கராஜா, ஆர்.பி.ஆதித்தன், மாவட்ட செயலாளர்கள் பச்சைமால், ஜெங்கின்ஸ், மாநில பேரவை துணை செயலாளர் இன்ஜினியர் லெட்சுமணன், நகர செயலாளர் அக்ஷயா கண்ணன், மேற்கு மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் டேவிட், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : ammuku ,
× RELATED ஒரே கம்பத்தில் கொடி ஏற்றுவதில் ...