×

தம்மம்பட்டியில் இன்று நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு மீண்டும் ஒத்திவைப்பு

தம்மம்பட்டி, பிப்.27: தம்மம்பட்டியில் இன்று நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு போட்டி தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ஏற்பாட்டாளர்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். இதில், சேலம் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டமான திருச்சி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஜல்லிக்கட்டு காளைகளுடன், மாடுபிடி வீரர்களும் பங்கேற்பர். ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகளை காரணம் காட்டி தம்மம்பட்டி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், குறிப்பிட்ட தினமான ஜனவரி 26ம் தேதி போட்டி நடைபெறவில்லை.

தொடர்ந்து போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வந்தநிலையில், இன்று(27ம் தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென போட்டியை ஒத்தி வைப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால், விழா ஏற்பாட்டாளர்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், தம்மம்பட்டியில் நேற்றிரவு நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய சேலம் புறநகர் மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் இளங்கோவன், இன்னும் ஓரிரு தினங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என தெரிவித்தார். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, போட்டி ஏற்பட்டாளர்களாக ஒரு தேதியை நிர்ணயித்து வைத்திருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் தேதி முடிவு செய்யாததால் ஜல்லிக்கட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Tags : Dhamamampatti ,
× RELATED தம்மம்பட்டி பகுதியில் காலிபிளவரில் மகசூல் பாதிப்பு விவசாயிகள் கண்ணீர்