×

க.பரமத்தி பகுதியில் மார்ச் 4ல் சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா


க.பரமத்தி, பிப். 27: க.பரமத்தி பகுதி சிவன் கோயில்களில் வரும் 4ம் தேதி மகா சிவராத்திரி விழாவையொட்டி நான்கு கால வெவ்வேறு அபிஷேக வழிபாட்டில் சுற்று வட்டார பகுதி பக்தர்கள் பங்கேற்குமாறு கோயில் நிர்வாகிகள் கேட்டு கொண்டதுடன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட 30 ஊராட்சிகளில் பிரசித்தி பெற்ற கோயில்களான பவித்திரமேடு அருகே பாலசுப்பிரமணிய சுவாமி சித்தர் சமாதி, க.பரமத்தி சவுந்தரநாயகி உடனமர் சடையீஸ்வர சுவாமி, குப்பம் குங்குமவல்லி சமேத கும்பேஸ்வரர் கோயில், மரகதவல்லி உடனுறை மரகதீஸ்வரர் கோயில், தென்னிலை சிவகாமசுந்தரி உடனமர் தேவேந்திர லிங்கேஸ்வரர் சுவாமி, சின்னதாராபுரம் முனீ முக்தீஸ்வரர், புன்னம் மற்றும் கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி, புன்னை வன நாயகி உடனுறை புன்னைவனநாதர் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளது.

இக்கோயில்களில் அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகிறது. மேலும் மகா சிவராத்திரி விழாவையொட்டி ஆண்டுதோறும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
பவித்திரமேடு அருகே பாலசுப்பிரமணிய சுவாமி சித்தர் சமாதி கோயிலில் வரும் 4ம் தேதி சிவராத்திரி விழா சிறப்பு பூஜையுடன் துவங்குகிறது. விழாவையொட்டி மாலை 6 மணி முதல் 9 வரை முதலாம் காலபூஜை, இரவு 10 மணி முதல் 12 மணி வரை இரண்டாம் காலபூஜை, அதிகாலை 1 மணி முதல் 3 மணிக்குள் மூன்றாம் காலபூஜை, 4 மணி முதல் 6 மணி வரை நான்காம் காலபூஜை நடத்தப்பட்டு சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான மூலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட உள்ளது.

எனவே அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வழங்க விருப்பமுள்ள பக்தர்கள் அந்தந்த கோயில்களில் வழங்கலாம் என்றும், கோயில்களில் நடைபெறும் மகா சிவராத்திரி வழிபாட்டில் சுற்று வட்டார பகுதி பக்தர்கள் பங்கேற்குமாறும் கோயில் நிர்வாகிகள் கேட்டுகொண்டதுடன் விழாவிற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

Tags : Maha Shivarathri ,festival ,temples ,Shiva ,Paramathi ,
× RELATED அம்மன் கோயில்களில் திருவிழா