×

சூளகிரி அருகே குவாரிகள், ஜல்லி கிரஷர்களால் வீடுகளில் விரிசல், நோயால் பாதிப்பு

கிருஷ்ணகிரி, பிப்.26:  சூளகிரி அருகே, கல் குவாரிகள் மற்றும் ஜல்லி கிரசர்களால் வீடுகளில் விரிசல் மற்றும் ஆஸ்துமா நோயால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், சூளகிரி தாலுகா குக்கலப்பள்ளி, குட்டப்பள்ளி, திருமலகவுனிகோட்டா ஆகிய கிராமமக்கள் கலெக்டர் பிரபாகரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எங்கள் கிராமங்களில், 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகினற்னர். இங்கு குடியிருப்பில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் கல்குவாரி ஒன்று 10 ஆண்டிற்கு மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜல்லி கிரஷர் ஒன்றை துவக்கி உள்ளனர். இவை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவில் மட்டும் இயங்குகிறது.

ஏற்கனவே கல் குவாரியில் வைக்கும் வெடிகளால் வீடு, பள்ளி மற்றும் கோவில் சுவர்களில் விரிசல் விட்டுள்ளது. அத்துடன் குடிநீர் பிரச்னை, தூசுகளால் விவசாயம் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில், தற்போது ஜல்லி கிரஷரால் இரவில் தூக்கமின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஜல்லி கிரஷர் தூசுகளால் பலர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றில் பரவும் தூசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வதற்கான எந்த சூழ்நிலையும் எங்கள் கிராமத்தில் இல்லை. எனவே, இரவில் இயங்கும் ஜல்லி கிரஷர் மற்றும் மாசு ஏற்படுத்தும் கல் குவாரியை தடை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags : Quarries ,homes ,Sulagiri ,jelly cousins ,
× RELATED டெல்டா நிரந்தரமாக பாலைவனமாகி விடும்...