×

கருங்கற்கள் கொட்டியும் ஆசனூர்- சித்தாத்தூர் சாலை பணி தாமதம்

உளுந்தூர்பேட்டை, பிப். 26: உளுந்தூர்பேட்டை ஆசனூர் கிராமத்தில் இருந்து கூந்தலூர், குருபீடபுரம், சித்தாத்தூர் கிராமத்தின் வழியாக நின்னையூர் உள்ளிட்ட சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வரும் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தார் சாலையாக போடப்பட்டது. இந்த சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும், குழியுமான மாறி எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆசனூர் கிராமத்தில் இருந்து சித்தாத்தூர் கிராமம் வரை செல்லக்கூடிய சுமார் 5 கிலோ மீட்டர் சாலையில் தார் சாலை போடுவதற்காக சாலையின் ஓரம் கருங்கற்கள் கொட்டப்பட்டது. இதன் வழியாக பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் செல்லும்போது கருங்கற்கள் கலைந்து தற்போது சாலை முழுவதும் கருங்கற்களாகவே உள்ளது.

இதனால் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சைக்கிள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் செல்வதற்கு பகல் மற்றும் இரவு நேரத்தில் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கருங்கற்களில் செல்லும்போது பள்ளி மாணவர்கள், முதியவர்கள் என பலர் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளதால் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம பொதுமக்கள் பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரையில் சாலை போடும் பணிகள் துவங்கப்படவில்லை என கிராம பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுத்து ஆசனூர் கிராமத்தில் இருந்து சித்தாத்தூர் கிராமம் வரையில் செல்லக்கூடிய சாலையை விரைந்து போட வேண்டும் என 20 கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Ananur- Siddhathur ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை