×

செவல்பட்டியில் அவலம் நூலக கட்டிடத்தில் இயங்கும் பால்வாடி

சிவகாசி, பிப்.22: வெம்பக்கோட்டை தாலுகா செவல்பட்டியில் அங்கன்வாடி மையத்திற்கு கட்டிட வசதி இல்லை. இதனால் நூலக கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படும் அவல நிலை நிலவுகிறது.வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ளது செவல்பட்டி கிராமம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் அங்கன்வாடி மையத்திற்கு கட்டிட வசதி இல்லை. பழைய கட்டிடம் இடிந்து சேதமடைந்து கிடப்பதால் அருகில் உள்ள நூலகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ஒரு பொறுப்பாளர், சமையலர் பணிபுரிந்து வருகின்றனர். நூலக கட்டிடம் சிறியதாக உள்ளதால் குழந்தைகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. அனைத்து மாணவர்களும் ஒன்றாக உட்கார்ந்து உணவு அருந்த போதிய இடவசதி இன்றி அவதிப்படுகின்றனர். செவல்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டி தரக்கோரி அதிமுக எம்பியிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம் அருகே புதிய அங்கன்வாடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். ஆனால் பல ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க படவில்லை.
இதனால் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.செவல்பட்டியை சேர்ந்த முருகன் என்பவர் கூறுகையில், ‘‘செவல்பட்டியில் அங்கன்வாடி மையத்திற்கு கட்டிட வசதி பல ஆண்டுகளாக இல்லை. இது குறித்து எம்எல்ஏ, எம்பி.யிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நூலக கட்டிடத்தில் மையம் செயல்படுகிறது. இங்கு போதிய இடவசதியின்றி குழந்தைகள் அவதிப்படுகின்றனர். செவல்பட்டியில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Balavadi ,library ,Chevalpatti ,Nilam Library ,
× RELATED ₹2.15 கோடியில் புத்துயிர் பெறும் வேலூர்...