×

அவசர கதியில் திறக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம்

மரக்காணம், பிப். 21: மரக்காணத்தில் அவசர கதியில் வட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
 மரக்காணம் பகுதியில் 56 ஊராட்சிகள் உள்ளது. இப்பகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு தேவையான எந்தவொரு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றாலும் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திண்டிவனம் தாலுகா அலுவலகத்திற்குத்தான் செல்லும் நிலை இருந்தது. இதனால் பொதுமக்களுக்கு காலதாமதம், அதிக பணவிரையம் ஏற்பட்டது. இதனால் மரக்காணத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் மரக்காணத்தை தனி வட்டமாக அரசு அறிவித்தது.

ஆனால்  வருவாய்த்துறைக்கு சொந்தமான கட்டிடம் இல்லை. இதனால் இங்கு செயல்பட்டு வந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சொந்தமான ஒரு சிறிய கட்டிடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கு ரூ.2.5 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது. அலுவலகத்தை பிப். 19ம் தேதி சென்னையில் இருந்து முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து குத்து விளக்கேற்றி விழாவை துவக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தது. இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர கோலத்தில் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர். மேலும் அதிமுகவில் உள்ள இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளைச் சேர்ந்த ஒரு சில முக்கியஸ்தர்களையும் அதிகாரிகள் திறப்பு விழாவிற்கு அழைத்தனர். இதனால் காலை 9 மணிக்கே அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி முக்கியஸ்தர்கள் வந்தனர். மதியம் 12 மற்றும் மாலை 4 மணிக்கு திறப்பு விழா என்று கூறினர். ஆனால் திறக்கப்படவில்லை.

இதனால் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள் கடுப்பாகி இனிமேல் திறப்பு விழா நடக்காது என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு திறப்பு விழா நடைபெறுகிறது என்று மாவட்ட நிர்வாகம் மூலம் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவசர தகவல் கிடைத்தது. இந்த தகவலால் ஒரு சில அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இவர்கள் வேறு வழியில்லாமல் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட ஒரு சில அரசியல் பிரமுகர்களுக்கு மட்டும் தகவல் கொடுத்தனர். இதனால் ஒரு சிலர் மட்டும் விழாவில் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து இரவு 7.10 மணிக்கு அவசர கதியில் மரக்காணம் வட்டாட்சியர் தனலட்சுமி, அதிமுக ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் ஆகியோர் குத்து விளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தனர். அவசர கோலத்தில் இரவு நேரத்தில் வட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Tags : Vatatsar Office ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை