×

ஜிப்மர் ரத்த வங்கி சார்பில் கடந்தாண்டு 17552 யூனிட் ரத்தம் சேகரிப்பு

புதுச்சேரி, பிப். 13:  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் தேசிய தன்னார்வ ரத்த தான மாதத்தின் தொடர்ச்சியாக தன்னார்வ ரத்த கொடையாளர்கள், ரத்த தான முகாம்களுக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு பாராட்டு விழா ஜிப்மர் வளாகத்தில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் அரங்கத்தில் நடந்தது.கடந்த 2018ம் ஆண்டு, ஜிப்மர் ரத்த வங்கி சார்பில் 17552 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு, மொத்தம் 52,656 ரத்த பகுதிகளாக பிரித்து நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 96ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி பகுதியில் அதிகபட்சமாக 228 யூனிட் ரத்தம் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி நடத்திய ரத்ததான முகாமில் சேகரிக்கப்பட்டது. மேலும், 380 தட்டணு ரத்த பகுதிகள் சேகரிக்கப்பட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னார்வ ரத்த கொடையாளர்கள், ரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்தவர்களை கவுரவிக்கும் வகையில் ஜிப்மர் மருத்துவமனை சார்பில் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஜிப்மர் இயக்குநர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் படே மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இயக்குனர்
கோவிந்தராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் 530 தன்னார்வ ரத்த தான கொடையாளர்கள், ரத்த தான முகாம் ஏற்பாடு செய்த  கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஜிப்மர் ரத்த வங்கி ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags : Blood Bank ,Jipmer ,
× RELATED ரத்ததான முகாம்