×

நெருங்கும் கோடை விடுமுறை கலைகளை கற்க மாணவர்கள் ஆர்வம்

பழநி, பிப்.12: வருடம் முழுவதும் காலை கண் விழிப்பதிலிருந்து கண் அயரும் வரை பள்ளி, சிறப்பு பயிற்சி, டியூசன் என பரபரப்பாக இருப்பவர்கள் மாணவர்கள். இவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடக்கும் ஆண்டு இறுதி தேர்விற்குப் பின் 2 மாதங்கள் விடுமுறை விடப்படும். இக்காலங்களில் உறவினர் வீடுகளுக்கு செல்வது, சுற்றுலா செல்வது, ஓய்வு எடுப்பதென பொழுதைக் கழிப்பது வழக்கம். ஆனால் மாறிவரும் நாகரீக உலகில் வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தினர் கூடுதல் திறமைகளை வளர்த்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதனால் சுற்றுலா போன்ற பொழுதுபோக்கு விஷயங்களுக்கு செய்யும் செலவுகள் சுருக்கப்பட்டு, தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள செலவிடுகின்றனர். இதன் காரணமாக இவ்விடுமுறை காலங்களில் பெற்றோர் தங்களது குழந்தைகளை ஓவியம், கராத்தே, யோகா, கணிப்பொறி, நீச்சல், இசை, தையல், நடனம் போன்றவை கற்றுத்தரப்படும் பயிற்சி மையங்களில் சேர்த்து விடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக மாணவர்கள் விடுமுறை காலங்களில் தற்போது இதுபோன்ற பயிற்சி மையங்களை நாடிச் செல்வது அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து பழநியைச் சேர்ந்த ஓவிய பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் சின்னப்பா கூறுகையில்,

 ‘‘கடந்த சில ஆண்டுகளாகத்தான் இதுபோன்ற பயிற்சி மையங்களை நாடி வருவது அதிகரித்துள்ளது. விடுமுறை காலங்களில் சுற்றுலா செல்வதென்பது தற்போதுள்ள பொருளாதார நிலையில் பலருக்கு சாத்தியமில்லாததாகிறது. உறவினர் வீடுகளுக்கு செல்வதிலும் தற்போது பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளதாகிறது. மேலும் பள்ளி காலங்களில் இதுபோன்ற கலைகளை கற்றுக் கொள்ள நேரம் கிடைக்காமல் போய் விடுகிறது. இக்கலைகளை கற்றுக்கொள்வதால்          மாணவர்களுக்கு தனித்திறன்கள் வளர்வதுடன், மன அமைதியும் ஏற்படுகிறது. மேலும் மாணவர்களுடன் அவர்களின் பெற்றோரும்   சேர்ந்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்கின்றனர்.  எனவே, இவ்விடுமுறை காலத்தை இதுபோன்ற கலைகளை கற்றுக் கொள்ள    நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.மாணவர்கள் இதுபோன்ற கலைகளை கற்றுக் கொள்ள காட்டும் ஆர்வத்தை உணர்ந்து கொண்ட சில பள்ளிகள், இக்கலைகளுக்கான ஆசிரியர்களை நியமித்து பள்ளிகளிலேயே பயிற்சி அளிக்க துவங்கி உள்ளனர். இதற்கு தனிக் கட்டணமும் வசூலித்துக் கொள்கின்றனர். ஆனால் மிகக் குறுகிய காலத்தில் இக்கலைகளுக்கான பயிற்சி அளிக்கப்படும் போது அதன் தரம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாக இருக்க வேண்டும்’’ என்றார்.

Tags : summer holiday performances ,
× RELATED ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து...